Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... சேலம்

பால் உற்பத்தியாளர்கள் சங்க
கட்டடத்துக்கு அடிக்கல்
ஆத்துார் அருகே, தாண்டவராயபுரம் கிராமத்தில், பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம்
கட்டுவதற்கு, கள்ளக்குறிச்சி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று ஆத்துார் ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி தலைமையில் நடந்தது. அட்மா குழு தலைவர் செழியன், மாவட்ட கவுன்சிலர்
நல்லம்மாள், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி, ஊராட்சி தலைவர் ஷாலினி, பி.டி.ஓ.,

பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.30 லட்சத்துக்கு
ஆடுகள் விற்பனை
வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில், 30 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
வாழப்பாடி அடுத்த பேளூரில் நேற்று ஆடு விற்பனை நடந்தது. சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். 900 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 5,000 முதல், 6,500 ரூபாய் வரை விலை போனது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 3,000 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற சந்தையில், 30 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.


மின் ஊழியரை தாக்கியமூன்று பேர் மீது வழக்கு
காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் பூபாலன், 40. இவர், உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோபி, அவரது சகோதரர்கள் விஸ்வநாதன், மூர்த்தி உள்ளிட்டோருக்கும், கடந்த தைப்பூசத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், கோபி அவரது சகோதரர்கள் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பூபாலனிடம் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகிலிருந்த செங்கல்லை எடுத்து பூபாலனை தாக்கினர். இதில் மண்டை உடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, கோபி, சகோதரர்கள் மூர்த்தி, விஸ்வநாதன் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாயமாகியுள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை, நாமமலையை சேர்ந்தவர் செல்வம், 62, தறி தொழிலாளி, இவரது மனைவி புஷ்பா, 52, தாய் பாக்கியம், 80, மகன் முருகன், 32, ஆகியோர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த, 5ல், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றனர். பின் அவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பவில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், அம்மாபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருப்பதும், திருப்பி செலுத்த முடியாததால் மாயமாகி இருக்கலாம் என, தெரியவந்துள்ளது.


ஆத்துார் கிளை நுாலகத்துக்குமேஜை, நாற்காலி வழங்கல்
ஆத்துார் கிளை நுாலகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் அதிகளவில் படித்து வருகின்றனர். இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு, அட்சயா அறக்கட்டளை சார்பில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டது. நுாலகர் அழகுவேல், வக்கீல் மாதேஸ்வரன், அட்சயா அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொழிலதிபர் விபரீத முடிவுஆத்துார், ராணிப்பேட்டையை சேர்ந்தவர்
அறிவுடைநம்பி, 65. தொழிலதிபரான இவர், அதே பகுதியில், ஆட்டோ பேரிங் கடை நடத்தி வந்தார். நேற்று காலை, வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வரவில்லை. அப்போது, அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அறிவுடை நம்பி துாக்கிட்டு இறந்துள்ளது தெரிய வந்தது. ஆத்துார் டவுன் போலீசார், அறிவுடைநம்பி உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


இலவச கண் பரிசோதனைசேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள, சேலம் கோட்ட போக்குவரத்து அலுவலகத்தில், தனியார் கண் மருத்துவமனை மூலமாக பணியாளர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி துவக்கி வைத்தார். முகாமில், 102 டிரைவர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பட்டாசு வெடித்து தீ விபத்து
விழாவில் இருவர் படுகாயம்
சேலம் இரும்பாலை அருகில் உள்ள இருசாயி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது.
இதற்காக வாண வெடி கொளுத்தப்பட்டது. இவற்றை சேலம், கொங்கணாபுரம் கச்சுப்பள்ளியை சேர்ந்த பட்டாசு வெடிக்கும் தொழிலாளி சக்திவேல் 27, வெடித்து கொண்டிருந்தார். அவர் விட்ட ராக்கெட் பட்டாசிலிருந்து தீப்பொறி பறந்து, அவர் வைத்திருந்த மொத்த பட்டாசுகளின் மீது சிதறியது. அவையனைத்தும் வெடித்து சிதறிதால், தீ விபத்து ஏற்பட்டது. இதில் சக்திவேல் பலத்த காயம் அடைந்தார். அவரது பைக்கும் எரிந்து சாம்பலானது. மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் கவின், 9, காயமடைந்தார். சக்திவேல், கவின் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வி.ஏ.ஓ., சரவணன் புகார்படி, கோவில் நிர்வாக குழுவினர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து, இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பஞ்சு மிட்டாய் தயாரிப்பு
நிறுவனங்களில் ஆய்வு
சேலத்தில், இரு பஞ்சு மிட்டாய் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அ-லுவலர் கதிரவன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் உள்ள, பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் மற்றும் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் உணவு பொருட்களுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், அனுமதிக்கப்பட்ட நிறமிகள் அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று சேலத்தில் உள்ள மால், பெங்களூரு பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள இரு பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில், எட்டு வகையான உணவு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

சாலையில் மனு வீசிய
நபரால் பரபரப்பு
ஜலகண்டாபுரம் செலவடையை சேர்ந்தவர் மணி, 49. இவர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் சோதனை செய்தபோது, பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணி, தான் கொண்டு வந்திருந்த மனுக்களை சாலையில் துாக்கி வீசினார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 2014ம் ஆண்டு தன்னை சூதாட்ட வழக்கில் கைது செய்து ஜலகண்டாபுரம் போலீசார் அழைத்து சென்று அடித்தனர். இதனால், முதுகு தண்டுவடம் பாதிப்படைந்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக மனித உரிமை கழகத்தில் வழக்கு தொடுத்தேன். 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை நிவாரணத் தொகை வழங்கவில்லை. இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

கோவில் அருகில் முள்வேலி வேண்டாம்
மாநகராட்சியிடம் அறக்கட்டளை சார்பில் மனு
சேலம் சூரமங்கலம் பகுதியில், அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள நிலத்துக்கு முள்வேலி அமைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம், சூரமங்கலம் அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், நேற்று அறங்காவலர் பரஞ்சோதி பிள்ளை, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: சூரமங்கலத்தில் உள்ள, ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் டிரஸ்ட் கோவிலுக்கு, பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 60 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் திருப்பணி நடந்து வருகின்றன. மகாசிவராத்தியன்று நடக்கும் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் கோவில் அருகில் உள்ள, 250 சதுரடி நிலத்தில், மாநகராட்சி சார்பில் முள்வேளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் சார்பில், முள்வேலி அமைக்க வேண்டாம் என, கேட்டு கொள்ளப்
படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கல்பகனுார் கிராமத்தில் கேமரா பொருத்தும் பணி
கல்பகனுார் கிராமத்தில், கூடுதலாக ஐந்து 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்துார் அருகே, கல்பகனுார் கிராமத்தில் கடந்த, 5ல், இரவு, 10:00 மணியளவில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரின் குடியிருப்பு பகுதிக்குள் சென்று, சைக்கிள், பைக், பாத்திரம் என, சேதப்படுத்தினர். கற்கள் வீசி தாக்கியதில், போலீஸ் ஏட்டு காயமடைந்தார். இதுகுறித்து, ஆத்துார் ஊரக போலீசார் இரு தரப்பை சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அக்கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று, கல்பகனுார் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, தெரு, சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், ஐந்து கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'கல்பகனுார் கிராமத்தில், ஏற்கனவே ஆறு 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருதரப்பு மோதல் காரணமாக, இருவேறு தரப்பினர் வசிக்கும் நுழைவு பகுதிகளில், புதிதாக ஐந்து 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

'ரேஷன் கடைகளில் தேங்காய்
எண்ணெய் வழங்க வேண்டும்'
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கிறோம். நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இடு பொருள்கள் விலை ஏற்றம், ஆட்கள் கூலி உயர்வு போன்றவைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நெல் குவிண்டால் ஒன்றுக்கு, 3,500, கரும்பு டன் ஒன்றுக்கு, 5,000 ரூபாய் உயர்த்த வேண்டும்.
பத்தாண்டுகளாக, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. மலேசியா, இந்தோனேஷியா நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வரும் பட்ஜெட்டில் நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மது விற்பனையை தி.மு.க., அரசு
நிறுத்தாது: முன்னாள் அமைச்சர் பேச்சு
''மது ஆலைகள், தி.மு.க.,வினரிடம் உள்ளதால், அதன் விற்பனையை, தி.மு.க., அரசு நிறுத்தாது,'' என, ஆத்துாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவபதி பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்துாரில் நகர, அ.தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம், தி.மு.க., அரசை கண்டித்து, தெருமுனை பிரசார கூட்டம், நகர செயலர் மோகன் தலைமையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் சிவபதி பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினர், 520 வாக்குறுதி அளித்தனர். லோக்சபா தேர்தலுக்கு, 1,040 வாக்குறுதிகள் தருவதற்காக, மாவட்டம் தோறும் செல்கின்றனர். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும், வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகளை பார்த்து, மக்கள் ஏமாற வேண்டாம். லோக்சபா தேர்தலுக்கு பின், மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவர். அ.தி.மு.க., ஆட்சியில் ஏழைகளுக்கு கொண்டு வந்த, 14 திட்டங்களை, தி.மு.க., நிறுத்திவிட்டது. மது ஆலைகள் அனைத்தும், தி.மு.க.,வினருடையது என்பதால், ஆட்சியில் இருக்கும் வரை நிறுத்த மாட்டார்கள். லோக்சபா தேர்தலில், மீண்டும் மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காக, மாவட்டத்துக்கு ஒரு கதை சொல்லி ஏமாற்ற, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதேஸ்வரன், சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனைவி காணவில்லை
போலீசில் கணவர் புகார்
ஆத்துார் அருகே, அம்மம்பாளையம் தேர்நிலை தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருண், 31. இவருக்கு ஜெயப்பிரியா, 22, என்பவருடன், ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
கடந்த, 11ல், அருண் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அருண் அளித்த புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்
பனமரத்துப்பட்டி, பிப். 13-
பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில் தும்பல்பட்டி ஊராட்சியில், தெருமுனை பிரசாரம் நேற்றிரவு நடந்தது. ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், மின் கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் அத்தியவாசிய பொருட்களின் விலையை உயர்த்திய, தி.மு.க., அரசை கண்டித்து தலைமை பேச்சாளர் சுந்தர பாண்டியன் பேசினார்.
குரால்நத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மாரியப்பன், கிளை செயலர்கள் மணி, சுப்ரமணி, ஜெயசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கிழக்கு மின் கோட்டத்தில்நாளை குறைதீர் கூட்டம்
சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனி, கிழக்கு மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை, (14ல்,) நடக்கிறது. வட்ட மேற்பார்வை பொறியாளர் தெண்டபாணி தலைமையில் காலை, 11:00 முதல், பகல் 1:00 மணி வரை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர், மின் தொடர்பான குறைகள், கோரிக்கைகளை மனுவாகவும், நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.


வீட்டு நிலத்தை அபகரிக்க முயற்சிசேலம், ஜாகீர் சின்னம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்தவர் சேட்டு, 48. இவர் நேற்று தனது மனைவி, இரு கை குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அதேபோல் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறினார். இதையடுத்து சேட்டுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், ''நான், 2020ம் ஆண்டு, 957 சதுர அடி வீட்டு நிலத்தை, 7 லட்சத்திற்கு ஒருவரிடம் வாங்கினேன். தற்போது அவர் ஜங்ஷன் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகருடன் சேர்ந்து கொண்டு, சொத்தை திரும்ப கேட்டு மிரட்டுகிறார். சூரமங்கலம் போலீசாரும் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


மின் மோட்டார் பழுதுகுடிநீருக்கு திண்டாட்டம்
பனமரத்துப்பட்டி, மூக்குத்திபாளையம் ஊராட்சியில், 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரில் சிறு தொட்டி வைத்து, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பயடைந்தனர்.
இந்நிலையில், சிறு தொட்டிக்கு தண்ணீர் அனுப்பும் ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுதடைந்தது. இரண்டு மாதத்திற்கு மேலாகியும் மோட்டார் சரி செய்யப்படவில்லை.
குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறுதொட்டி மூலம் குடிநீர் வழங்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க., நகர செயலர் தாக்கியதாக
பா.ஜ., ஒன்றிய தலைவர் புகார்
ஓமலுார் காமாண்டப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 35. இவர் பா,ஜ., ஓமலுார் ஒன்றிய தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: ரோட்டோர கடை வியாபாரிகள் சம்பந்தமாக, நேற்று காலை டவுன் பஞ்., அலுவலகம் சென்றேன். உனக்கு இங்கு என்ன வேலை வெளியே போ என, நகர தி.மு.க., செயலர் ரவி என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகனை, பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், பொதுச்செயலர்கள் ஹரிராமன், ரவி ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இடைப்பாடி அருகே தலையில்
கல்லை போட்டு பெண் கொலை
இடைப்பாடி அருகே, கணவனை இழந்த பெண் நள்ளிரவில், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இடைப்பாடி அருகே குருக்கப்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி, 50. இவர் கணவர் மாணிக்கம், 10
ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது ஒரே மகளுக்கும் திருமணமாகி, வேறு ஊரில் வசித்து வருகிறார். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான பெருமாயி, தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, அப்பகுதி வழியாக சென்ற மக்கள், தலையில் கல்லை போட்டு
பெருமாயி இறந்து கிடப்பது குறித்து, பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, இடைப்பாடி இன்ஸ்பெக்டர்
சந்தரலேகா உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

56 பேருக்கு காசநோய் எக்ஸ்ரே பரிசோதனை
கெங்கவல்லி அடுத்த, நடுவலுார் சமத்துவபுரத்தில் காசநோய் கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட காசநோய் துணை இயக்குனர் கணபதி முகாமை தொடங்கி வைத்தார். காசநோய் அறிகுறி, பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை வழிகள், காச நோயாளிக்கான அரசின் நலத்திட்டம் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, நடமாடும் எக்ஸ்ரே இயந்திரத்தின் மூலம், 56 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில், 14 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மக்கள் வசிப்பிடத்துக்கு தேடி வந்து, நடமாடும் எக்ஸ் - ரே மூலம் பரிசோதனை செய்தது உபயோகமாக இருந்தது என பயனாளிகள் தெரிவித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி, சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை உள்ளிட்ட குழுவினர் முகாமில் சிகிச்சை அளித்தனர்.

அனுமதியின்றி கட்சி சின்னம்
பா.ம.க.,-வி.சி., மீது வழக்கு
நடுவலுாரில், அனுமதியின்றி பொது இடங்களில் கட்சி சின்னம், கொடி நிறத்தில் எழுதியது தொடர்பாக, பா.ம.க., - வி.சி., கட்சியினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே நடுவலுார் கிராமம் வழியாக, ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த சாலையில் உள்ள மின் கம்பம், மரம், நிழற்கூடம், பொது இடங்களில், பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியினர், தங்களது கட்சி சின்னம், கொடி நிறத்தில் எழுதி வைத்திருந்தனர். இதனால், அக்கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் இருந்தது. கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர், போலீசார் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, பொது இடங்களில் எழுதப்பட்டிருந்த கட்சி சின்னம், கொடி நிறத்தில் இருந்த எழுத்துகளை அழித்தனர். கெங்கவல்லி போலீசார், பா.ம.க., - வி.சி., கட்சியை சேர்ந்த, அடையாளம் தெரியாத நபர்கள் மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
ஜலகண்டாபுரம் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, 8 ம் வகுப்பு பயின்று வந்த, 13 வயது சிறுமி, நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள்
ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக
தெரிவித்தனர்.
இது குறித்து, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கெம்பிளாஸ்ட் சன்மார் சார்பில்
மருத்துவ உபகரணம் வழங்கல்
மேட்டூர், கெம்பிளாஸ்ட் சன்மார் ரசாயன ஆலை சார்பில், அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில், அதன் தலைவர் கஜேந்திரன், மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உபயோகத்துக்காக, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மல்டி பேரா மானிட்டர், நகல் இயந்திரம் வழங்கினார்.
அதனை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளவரசி பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் கெம்பிளாஸ்ட் அலுவலர்கள் ஸ்ரீதர் வாசுதேவன், ரகுராமச்சந்திரன், விவேக், அரவிந்த் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
சங்ககிரி அடுத்த வைகுந்தம் பகுதியில், தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி அடுத்த வடுகப்பட்டி, காஞ்சாம்புதுாரை சேர்ந்த ராமசாமி மகன் சங்கர், 32. இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர் வேலைக்கு செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வைகுந்தம் வரை, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏ.வி.ஆர்., தோட்டம் அருகே, எதிரே இரு
சக்கர வாகனத்தில் வந்த இருவர் சங்கர் மீது மோதுவது போல்
வந்துள்ளனர். இது குறித்து தட்டி கேட்ட சங்கரை, இவர்கள் இருவர் மட்டுமின்றி மேலும் இருவர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், சங்கரை மிரட்டி மொபைல் போன், 850 ரூபாய், தனியார் நிறுவனத்தின் ஐ.டி.,கார்டு, ஏ.டி.எம்., கார்டு, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறித்து சென்றனர். காயமடைந்த சங்கர், போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். பின்னர் அவர், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சங்ககிரி போலீசார் நடத்திய விசாரணையில், இ.புதுப்பாளையம், காட்டூரை சேர்ந்த மோகன்ராஜ், 24, ஜீவா, 29, அருள்குமார், 23, வைகுந்தத்தை சேர்ந்த பிரவீன், 19, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், ஏ.டி.எம்., கார்டு, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

பிணைய உறுதியை மீறியவருக்கு
ஓராண்டு சிறை தண்டனை
காரிப்பட்டி அருகே, பிணைய உறுதியை மீறிய குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
காரிப்பட்டி அடுத்த குள்ளம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் திருமலை, 25. இவர் மீது காரிப்பட்டி, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் இரு கொலை உட்பட எட்டு வழக்குகள் இருந்தன. இவர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால், 2022ல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, அப்போதைய சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இனி எவ்வித குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்த திருமலை, 2023 ஆக., 31ல் பிணைய பத்திரம் எழுதிக் கொடுத்ததால், சேலம்
ஆர்.டி.ஓ., இவரை ஜாமினில் விடுவித்தார். இதற்கிடையே கடந்தாண்டு நவ., 28ல், வாழப்பாடி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்ததோடு, அதே தினத்தன்று குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என பிணைய உறுதி பத்திரம் எழுதிக் கொடுத்திருந்த நிலையில், பிணைய உறுதியை மீறி, மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட திருமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதர் உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement