Load Image
Advertisement

 கடலோர ரயில் பாதை திட்டத்திற்கு நிதி குறைப்பு அதிருப்தி!;  மாமல்லை - செங்கை இடையிலும் பணி இழுபறி

மாமல்லபுரம் : சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டத்திற்கு, மத்திய பட்ஜெட்டில், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2007ல் துவக்கப்பட்டபோது 523.50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்திற்கு, தற்போது குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், பாதையின் ஒரு பிரிவாக, மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையேயான ரயில் பாதையை, உடனடியாக அமைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கலைச்சிற்பங்களை காண, இந்திய, சர்வதேச பயணியர் படையெடுக்கின்றனர். இப்பகுதி அருகில், கல்பாக்கத்தில் அணுசக்தி தொழில் வளாகமும் இயங்குகிறது.

சுற்றுலா, அணுசக்தி தொழில் மேம்பாடு என, வளர்ச்சி பெறும் இப்பகுதியில், தற்போது சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளது.

சென்னை - புதுச்சேரி இடையே சாலை தடம் மட்டுமே அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தற்கால வளர்ச்சி சூழலுக்கேற்ப, ரயில் போக்குவரத்து அவசியம்.

ரயில்வே நிர்வாகமும் பரிசீலித்து, சென்னை - கடலுார் இடையே, 180 கி.மீ.,க்கு கடலோர ரயில் பாதை அமைக்க முடிவெடுத்து, கடந்த 2007ல் ஒப்புதல் அளித்தது. 523.50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்துவதாக, கடந்த 2008 - 09ல் அறிவித்தது.

கள ஆய்விற்கு, 6.66 கோடி ரூபாய் ஒதுக்கியது. இப்பாதையால், ரயில் போக்குவரத்து வசதி ஏற்பட்டு, இப்பகுதிகள் மேலும் வளர்ச்சியடையும் என, இப்பகுதியினர் எதிர்பார்த்தனர்.

சென்னை, பெருங்குடி மேம்பால ரயில் பாதையிலிருந்து, மாமல்லபுரம் வழியே பாதையை துவக்க முடிவானது. அதே வேளை, வருவாய் கருதி, சரக்கு ரயில் இயக்கவும் பரிசீலிக்கப்பட்டது.

மேம்பால பாதையில் சரக்கு ரயில் இயக்கம் சாத்தியமற்றதாக அறிந்து, சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியே மாமல்லபுரத்திற்கும், அங்கிருந்து கடலுாருக்கும் ரயில் பாதை அமைக்க முடிவானது.

ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்த, மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கில், 100 - 300 மீ., பகுதிக்குள் அளவிடப்பட்டது.

செங்கல்பட்டு - மாமல்லபுரம் பாதைக்கு, செங்கல்பட்டு சாலையின் மேற்கில் அவ்வாறே அளவிடப்பட்டது. பாதை பகுதியை அடையாளப்படுத்தி, 2011ல் அளவீட்டு கற்கள் நடப்பட்டன.

இப்பகுதியினர் ஆவலுடன் எதிர்பார்த்தும், நீண்ட காலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.

பாதை நீளம், அதிக நிதி தேவை கருதி, திட்டத்தை தவிர்ப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இத்திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கியது. தற்போது, மிகவும் குறைவாக, 25 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொலைதுார பாதைக்கு அதிக நிதி, அதற்கான கால அவகாசம் தேவை. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, குறுகிய தொலைவாக, மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே, 26 கி.மீ., தொலைவுக்கு முதலில் ரயில்பாதை அமைத்து, போக்குவரத்து துவக்கலாம் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை - கன்னியாகுமரி ரயில் தடத்தில், செங்கல்பட்டு முக்கிய சந்திப்பாக உள்ளது. மாமல்லபுரம் - செங்கல்பட்டு பாதையால், விழுப்புரம் வழியே தென் மாவட்டங்களுக்கும், கேரள பகுதிகளுக்கும் இணைப்பு ஏற்படும். காஞ்சிபுரம் வழியே வட மாநிலங்களுக்கும் இணைப்பு ஏற்படும்.

மாமல்லபுரத்திலிருந்து தொலைதுார ரயில்கள் மற்றும் சென்னை - மாமல்லபுரம் இடையில் மின்சார ரயில்கள் இயக்கலாம்.

மாமல்லபுரத்தின் வருங்கால போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையில் ரயில் பாதை அமைவது அவசியம். இப்பாதைக்கென முழு நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

மாமல்லபுரத்தில சுற்றுலா வளர்ச்சியால், தினமும் பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், போதுமான பேருந்து வசதி இல்லை. வருங்கால தேவைக்கு ரயில் போக்குவரத்து மிகவும் அவசியம். மத்திய அரசு, குறைவாகவே நிதி ஒதுக்குவதால், திட்டமே கேள்விக்குறியாக உள்ளது. மாமல்லபுரம் - செங்கல்பட்டு பாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

-- சுற்றுலா ஆர்வலர்கள்,

மாமல்லபுரம்.

உத்தேசிக்கப்பட்ட பகுதிகள்

பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், புலியூர், ஈகை, மங்கலம், ருத்திரகோடி (திருக்கழுக்குன்றம்), கீரப்பாக்கம், புல்லேரி, துஞ்சம், நென்மேலி, கீழவேடு, மேலேரிப்பாக்கம், ஆலப்பாக்கம், மேலமையூர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement