Load Image
Advertisement

செந்தில் பாலாஜி ராஜினாமா?

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி பதவியை ராஜினாமா செய்து விட்டார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலி ஏற்பட்டதால், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. உடல் நிலை தேறிய பின் புழல் சிறைக்கு திரும்பினார்.

செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை, நிதி அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும்; மதுவிலக்கு ஆயத்தீர்வை (டாஸ்மாக்) துறை, வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமிக்கும் மாற்றப்பட்டன.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இது குறித்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார்.

துறைகள் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது' என தெரிவித்தார்.

ஆனால், அதை பொருட்படுத்தாமல், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்' என முதல்வர் அறிவித்தார்; அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏழு மாதங்களுக்கு மேலாக 15 தடவைக்கு மேல் ஜாமின் மனு கேட்டு, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒரு முறை அவர் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'அரசு ஊழியர்கள் குற்ற வழக்கில் சிறை சென்றால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.

'ஆனால், 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவரை, அமைச்சராக வைத்திருப்பதன் மூலம், மக்களுக்கு இந்த அரசு என்ன சொல்ல வருகிறது?' என கேள்வி எழுப்பினார்.

இது, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சிக்க துவங்கின.

நேற்று முன்தினம் சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார்.

இந்த சூழலில்தான், நேற்று செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை சிறை அதிகாரி வழியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார் என தகவல் வெளியானது.

செந்தில் எடுத்த முடிவை முதல்வர் ஏற்றுக் கொண்டால், அவரது கடிதத்தை கவர்னருக்கு அனுப்பிவைத்து, அதை ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு கவர்னருக்கு பரிந்துரை செய்வார். அதை ஏற்று கவர்னர் ஆணை பிறப்பிப்பார். இது நடைமுறை.

ஆனால், நேற்று இரவு 11:00 மணி வரையிலும் அரசு தரப்பிலோ, கவர்னர் மாளிகை தரப்பிலோ இந்த விஷயம் குறித்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. சிறை வட்டாரத்திலும், அறிவாலயத்திலும் பரபரப்பாக தகவல் விவாதிக்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி 2011 - -15 காலகட்டத்தில் ஜெயலலிதா அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு டிரைவர், கண்டக்டர் வேலைகளுக்கு ஆள் எடுப்பதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீதும், அவருடைய தம்பி அசோக் குமார் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பண மோசடி வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து செந்தில் கைது செய்யப்பட்டார். தம்பி அசோக் தலைமறைவானார்.

கைதான பிறகும் அமைச்சராக நீடிப்பதால், செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என அமலாக்கத்துறை ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன.

இப்போது அவர் ராஜினாமா செய்து விட்டதால், ஜாமின் கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாகி இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அசோக்கும் விரைவில் சரண் அடைவார் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (1)

  • சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore ,இந்தியா

    பொன்முடி எப்போது ராஜினாமா செய்வார்? அவரும் அமைச்சர் வேலை பார்க்காமல் ஓசியில் சம்பளம் மட்டும் பெற்றுக்கொண்டிருக்கிறாரே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement