Advertisement

சம்பாதிக்க ஒன்றும் இல்லை- நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா

இதோ... இப்ப பாருங்க! ஊழலை எதிர்த்து தைரியமா ஒரு மனுஷன் கிளம்பியிருக்கார், நாங்க அரசியல் பன்ற இந்த நாட்டுல ஊழலே கிடையாது'ன்னு சொல்ல வேண்டிய அரசியல்வாதிங்க.. அன்னா ஹசாரே மட்டும் யோக்கியமா?'ன்னு கேட்கறாங்க? சத்தியமா சொல்றேன்.. நாம உருப்பட போறதில்லை!'' ஒய்.ஜி.எம்...ன் கொதிக்கும் மனதிலிருந்து வெடித்துக் கிளம்பிய இவ்வார்த்தைகள்

"எந்த விஷயத்துக்கு உங்களுக்கு கோபம் வரும்?

விழிகளில் நீர் திரை எழும்ப.. ""நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நினைச்சாலே கண்ணீர்தான். "மறைஞ்சதுக்கு அப்புறம்தான் இந்த உலகம் நிஜமான கலைஞனை கொண்டாடும்ங்கிற உண்மைக்கு சிவாஜியும் சாட்சி! நீங்க சுவாசிக்கறது வெறும் காற்று சார். நான் சுவாசிக்கிறது கணேசன்.. சிவாஜி கணேசன்! (நினைவுகளில் கலங்கினார் ஒய்.ஜி.எம்.)

நீங்க நல்லவரா ? கெட்டவரா?
மெலிதான புன்னகைக்கு பிறகு "நான் தியாகம் பன்றதில்லை. எங்க அப்பாவுக்கு ஓழுங்கா திவசம் கொடுக்கறதில்லை. ஆனாலும், நான் நல்லவன்! ஏன்னா.. யாருக்கும் நான் கெடுதல் நினைக்கறதில்லை! (மிகச்சுலபமாய் வசீகரிக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரா.)

வாழ்க்கைங்கற நாடகமேடை திருப்தியா இருக்குதா?
ஏமாற்றங்களை, தோல்விகளை சந்திக்கலைன்னா... மனுஷனா பிறந்ததுக்கே அர்த்தம் இல்லாம போயிடும். ஆசைப்படற அத்தனையும், அவ்வளவு சுலபத்துல யாருக்கும் கிடைச்சிடாதுங்க. மனசுக்கு திருப்தி அடையத் தெரியணும்! இந்த வித்தை தெரிஞ்சா மட்டும்தான் சந்தோஷமா வாழ முடியும். என் மனசுக்கு இந்த வித்தை நல்லாவே தெரியும். ஒரு மகனா, நல்ல கணவனா, அன்பான தகப்பனா, ரசிகனோட விருப்பம் அறிஞ்ச கலைஞனா. நான் ரொம்ப மனநிறைவோட இருக்கேறன். வயசுல என்னைவிட சின்னவங்களா இருந்தாலும் என்கிட்டே இல்லாத திறமையோட வந்தாங்கன்னா.. எழுந்து நின்னு வணங்குற அளவுக்கு மனுஷனா இருக்கிறேன். எம்.எஸ். விஸ்வநாதன் இசையையும், முகம்மது ரபி பாடல்களையும் அன்னைக்கு ரசிச்ச மாதிரியே இன்னைக்கும் ரசிக்க மயங்குற மனசு வைச்சிருக்கிறேன் இதுக்கு மேல என்னங்க வேணும்!.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அணு அணுவாக ரசித்து வாழ்ந்தது எந்த வயதில்?
இப்பவும் அப்படித்தான் இருக்கேறன் ஆனா வாழ்க்கையை நான் ரசிக்க ஆரம்பிச்சது "டான்பாஸ்கோ' பள்ளி நாட்கள் தான். சுற்றுலா போன இடத்துல நாடகம் போட்டதை கேள்விப்பட்டு மறுநாள் வகுப்புல பாடம் நடத்தாம, என்னை நாடகம் போட வைச்சு ரசிச்ச ஆசிரியர் செல்வதுரை. ராமச்சந்திரன், முதல்வர் மேலன்.. இவங்கெல்லாம். இல்லைன்னாநான் இந்த அளவுக்கு வந்திருப்பேனான்னு தெரியலை. அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் மனசுக்குள்ளே பூ பூக்குது வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கணும்னா நல்ல நண்பர்கள் வேணும்னு சொல்வங்க. இந்த வரம் எனக்கு கிடைச்சதும் அப்போதான்! 1965வது வருஷம் என்கூட படிச்ச நண்பர்கள் அத்தனைபேரும்.. இப்பவும் ஒண்ணா இருக்கிறோம். குடும்பத்தோட அடிக்கடி சந்திக்கிறோம். சந்தோஷமா நினைவுகளை பகிர்ந்துக்குறோம் அதனால உங்க கேள்விக்கான பதில் .. என் 15 வயது முதல் இப்போது வரை! இனியும்...

இந்த உலகத்தில் இருக்கற ஆண்களையும் பெண்களையும் தண்டிக்கற வாய்ப்பு! எப்படிப்பட்டவர்களை தண்டீப்பீங்க?
தாய்மை உணர்வோட இருக்கற பெண்மையையும், அந்த பெண்மையை வணங்குற ஆண்மையையும் மதிக்கிறவன் நான். இதுல இருந்து தடம் மாறுறவங்களை நிச்சயம் தண்டிப்பேன். குறிப்பா. பெண்ணோட அனுமதியில்லாம அவளோட மனசையும், உடலையும் காயப்படுத்துற ஆண்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாம மரணதண்டனை கொடுப்பேன். அடுத்து காவலர்கள், கடற்கரையிலேயும், பூங்காக்கள்லேயும் காதலிக்கிறவங்களை விரட்டுற காவலர்கள்! இவங்களுக்கு தண்டனை கிடையாது. ஒரே ஒரு வேண்டுகோள்! காதலிக்கறவன் வேற எங்கே போய் சார் காதலிப்பான்? காதலை வாழ விடுங்க! இல்லேன்னா.. உலகம் ஸ்தம்பிச்சுடும்!' தமிழர்கள் நல்ல ரசிர்களா? நல்ல மனிதர்களா?
யார் வந்தாலும் வரவேற்று, வாழ்க்கை கொடுத்து "கட்-அவுட்' வைச்சு ஆர்ப்பரிக்கிற அடிப்படையில தமிழர்கர் தீவிர ரசிகர்கள். ஆனா, வந்தவங்களை கடவுளாக்கி கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துறாங்க பாருங்க.. இந்த அடிப்படையில் தகுதி மறந்த. பராம்பரியம் தொலைத்த மனிதர்கள் சார்... புகழுக்கு மயங்குறது தமிழனோட பலவீனம். பாருங்க.. உழைச்சு சம்பாதிக்க வாங்க வேண்டிய பொருளை இலவசமா வாங்குறத்து தயாரா இருக்கறோம். நாம நல்ல மனிதர்களா?

வரலாறு:


தங்களின் 62 நாடங்களை உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். ஒய்.ஜி.மகேந்திரா. இவரது யு.ஏ.ஏ. நாடகக்குழு 2012ல் தனது 60வது ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கிறது. தற்போது அமெரிக்க நாடக கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஒய்.ஜி.எம். 2012ல் அவர்களை தமிழகத்தில் மேடையேற்றவும் திட்டமிட்டிருக்கிறார்.

மின்னல் கேள்விகள்... மின்னும் பதில்கள்.......

ஒரே ஒருநாள் மனதுக்கு பிடித்த இன்னொரு தொழில் செய்யலாம்! என்றால்..

எல்லாவிதமான இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவன் என்ற முறையில். எனது குடும்பத்தினர் மற்றும் நான் ரசிக்கும் எம்.எஸ்.வி.யின் முன்னிலையில் மேடையேறுவன். நாள் முழுக்க அவர்களை மகிழ்விப்பேன்.

சென்னையில் மிகவும் பிடித்த இடம்? விரும்பும் மாற்றம்?
சபையர் திரையரங்கும், வுட்லேண்ட், டிரைவ் இன் ஹோட்டலுமே என் மனதிற்கு நெருக்கமான இடங்கள். இரண்டுமே தற்போது இல்லை. மீண்டும் வந்தால் மகிழ்வேன்!.

2012ல் உலகம் அழியப்போகிறது! இந்த செய்தி உங்களை பயமுறுத்துகிறதா? (சிரிக்கிறார்) உலகமென நான் நினைக்கும் என் ப்ரியத்துக்குரியவர்கள் மறைந்த பொழுதெல்லாம் என் உலகம் அழிந்திருக்கிறது. இதன்படி. கடைசியாக என் உலகம் அழிந்தது 2009ல் நாகேஷ் மரணத்தில்


ஓய்வு நேரங்களில்.....
சக்தியுள்ள இசையும், சத்துள்ள கதையும் கொண்ட படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பது பிடிக்கும். இந்த வகையில், நான் அதிகம் பார்ப்பது ஆங்கில திரைப்படங்களைத்தான்!.

இதுவரை சம்பாதிக்காத ஒன்று?
அவ்வப்போது கெட்டப்பெயர் உட்பட எல்லாமும் சம்பாதித்து விட்டேன். என் நினைவு புத்தகத்தையும், கனவு பெட்டகத்தையும் புரட்டி பார்த்தவரை.. இனி சம்பாதிக்க ஒன்று இல்லை!.

-துரை கோபால்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement