Load Image
Advertisement

மகனுக்காக தொகுதியை தயார்படுத்தும் அ.தி.மு.க., புள்ளி!

ADMK prepares constituency for son, point!   மகனுக்காக தொகுதியை தயார்படுத்தும் அ.தி.மு.க., புள்ளி!
ADVERTISEMENT

''தேர்தல் நேரத்துல திட்டத்தை செயல்படுத்தி, ஓட்டுகளை வளைக்க திட்டம் போடறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''எந்த திட்டத்தை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அத்திக்கடவு - அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம், 1,652 கோடி ரூபாய் மதிப்புல முடிஞ்சு, இப்ப வெள்ளோட்டம் நடக்கறது... இந்த திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கறதுல, இழுபறி நீடிக்கறது ஓய்...

''கொங்கு மண்டலத்துல, அத்திக்கடவு திட்டம் சார்ந்து, கணிசமான ஓட்டு வங்கி இருக்கு... அதனால, லோக்சபா தேர்தல்ல இந்த இழப்பீடு விவகாரத்தை முக்கிய ஆயுதமா பயன்படுத்த, அ.தி.மு.க., பிளான் பண்றது...

''அதே நேரம், சோதனை ஓட்டத்தை முடிச்சு, லோக்சபா தேர்தல் நேரத்துல திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, ஓட்டுகளை வளைக்க தி.மு.க.,வும் தயாராகறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''தெய்வ குத்தமா போயிட்டுன்னு பக்தர்கள் வேதனைப்படுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில்ல, சமீபத்துல நடந்த கலசாபிஷேக விழா சர்ச்சை ஆயிட்டு... அதாவது, 'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, உதவி அர்ச்சகர்களை நியமிக்க கூடாது, கோவில் ஆகம விதிப்படி நடக்கும் உள் வேலைகளுக்கு வெளியாட்களை அழைச்சுட்டு வந்து பூஜை செய்யக் கூடாது'ன்னு சட்ட அறிவுறுத்தல் இருக்கு வே...

''ஆனா, அதை கோவில் பெண் அதிகாரி துாக்கி கடாசிட்டு, தலைமை அர்ச்சகரின், 17 வயது மகனை உதவி அர்ச்சகரா நியமிச்சு, கோவிலின் மிக முக்கியமான கலசாபிஷேக பூஜையை செய்ய வச்சிருக்காங்க...

''வெளியாளை கோவிலின் உள்புற பூஜைக்கு அழைத்து வந்ததை பார்த்து, பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் அதிர்ச்சி ஆயிட்டாவ வே...

''கோவில் ஆகம விதிப்படி, இது பெரிய தெய்வ குத்தமா பார்க்கப்படுது... இது பத்தி, ஆனைமலை பேரூராட்சி சார்புல, கோவில் அதிகாரிகளிடம் புகார் தெரிவிச்சதும், 'அதுபோல நடக்கவே இல்லை'ன்னு முதல்ல மறுத்திருக்காவ வே...

''அப்புறமா, போட்டோ, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதும், இப்ப தலைமை அர்ச்சகரை கோவிலின் உட்பிரகாரத்துல இருக்கிற சிறுகோவிலுக்கு மாத்தி விட்டிருக்காவ வே...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார், அண்ணாச்சி.

''மகனுக்காக பம்பரமா சுத்தி வர்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த ஊருல, யாருப்பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கிருஷ்ணகிரியை சேர்ந்த, அ.தி.மு.க., துணை பொதுச் செயலரான முனுசாமி, தொகுதியை லோக்சபா தேர்தலுக்கு தயார்படுத்திட்டு இருக்காருங்க... பா.ம.க., பிரமுகர்கள், பன்னீர்செல்வம் அணியினரை வளைச்சு போடுறதுல தீவிரம் காட்டுறாருங்க... சமீபத்துல கூட ஒரு காங்., புள்ளியை கட்சிக்கு இழுத்துட்டு வந்தாருங்க...

''முனுசாமி இவ்வளவு வேகமா செயல்படுறதுலயும் காரணம் இருக்கு... 'கிருஷ்ணகிரி தொகுதியில, தன் மகன் சதீஷ்குமாரை வேட்பாளரா நிறுத்த திட்டமிட்டிருக்காரு... அதனால தான், இப்பவே தொகுதியை விழுந்து விழுந்து கவனிக்கிறாரு'ன்னு, அவரது எதிர் கோஷ்டியினர் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


வாசகர் கருத்து (2)

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    ஆடுங்கடா டெட்பாடிய சுத்தி. ஆனா வின் பண்ணப் போவது என்னவோ அண்ணாமலை வேட்பாளர்தான்.

    • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

      ஏன்பா மனசாட்சியோடு பேசுப்பா, டெட் பாடி வராது சரி, ஆனால் ஆடுனாலே எப்படி டெபாசிட் இழக்காம இருக்கு முடியும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement