Load Image
Advertisement

கட்டிங் வசூலித்த கலெக்டர் ஆபீஸ் அதிகாரி!

  Collector office officer who collected cutting!     கட்டிங் வசூலித்த கலெக்டர் ஆபீஸ் அதிகாரி!
ADVERTISEMENT
''மறுபடியும் பதவி குடுத்தா, கட்சிக்கு வருவார்னு சொல்லுதாவ வே...'' என, கருப்பட்டி காபிக்கு ஆர்டர் தந்தபடியே அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்... பல வருஷங்களுக்கு முன்னாடி, அ.தி.மு.க., மாவட்டச் செயலரா இருந்தாரு வே...

''இவரது பதவியை பறிச்சு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான ராமச்சந்திரனிடம் குடுத்துட்டதால, அதிருப்தியாகி, கட்சியில இருந்து ஒதுங்கிட்டாரு... கடந்த எட்டு வருஷமா அரசியல்ல இருந்தும் சுத்தமா ஒதுங்கியிருந்தாரு வே...

''இந்த சூழல்ல, சமீபத்துல வேப்பூர் முன்னாள் ஒன்றிய செயலர் வெங்கடாசலம் உள்ளிட்ட, தி.மு.க.,வினரை அழைச்சிட்டு போய், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில அ.தி.மு.க.,வுல சேர்த்தாரு...

''அப்ப பழனிசாமி, 'மறுபடியும் நீங்க கட்சியில சேர்ந்து செயல்படுங்க'ன்னு கேட்டிருக்காரு... ரவிச்சந்திரன், 'சமயம் வர்றப்ப கண்டிப்பா வர்றேன்'னு சொல்லியிருக்காரு வே...

''இவருக்கு மாவட்டத்துல இன்னும் நிறைய ஆதரவாளர்கள் இருக்காவ... 'அண்ணனுக்கு மறுபடியும் மாவட்ட செயலர் பதவி குடுத்தா, கட்சிக்கு வந்து இன்னும் பெரிய அளவுல கட்சியை வளர்ப்பார்'னு அவங்க சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''சீட் பிடிக்க இப்பவே காய் நகர்த்துறாருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.

''எந்த கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''முன்னாள் எம்.பி., மைத்ரேயன், பா.ஜ., வுல மறுபடியும் சேர்ந்த பிறகு, சமீபத்துல கமலாலயத்துல, மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து, முக்கால் மணி நேரம் பேசியிருக்காருங்க...

''தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு மட்டும், அந்த கட்சியில ஆறேழு நிர்வாகிகள் போட்டி போடுறாங்க... புயல் மழையால, வேளச்சேரி, சோழிங்கநல்லுார் பகுதிகள் எல்லாம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கிறதால, இந்த ஏரியா மக்கள், ஆளுங்கட்சி மேல கடும் கோபத்துல இருக்காங்க...

''அதனால, 'தென் சென்னை தொகுதியில, பா.ஜ., வெற்றி பெற வாய்ப்பு அதிகமா இருக்குது... அதுக்காக தான், இப்பவே மாநில தலைவரை பார்த்து, மைத்ரேயன், 'துண்டு' போட்டுட்டு போயிருக்கார்'னு, கமலாலய வட்டாரத்துல பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''இட மாறுதல்ல ஏகத்துக்கும் வாரி குவிச்சிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்த ஊர் அதிகாரியை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சீக்கிரமே லோக்சபா தேர்தல் வர இருக்கிறதால, திருப்பூர் மாவட்டத்துல, வருவாய் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்றாங்க... இதுல, பலரையும் ஒரு தாலுகா விட்டு வேற தாலுகான்னு துாக்கி அடிச்சுட்டாங்க பா....

''இதனால, பலரும் தங்களது வீடுகள் இருக்கிற தாலுகாவுலயே தங்களுக்கு மாறுதல் போடுங்கன்னு, கலெக்டர் ஆபீஸ் அதிகாரிகளிடம் கேட்டிருக்காங்க... இதை கப்புன்னு புடிச்சுக்கிட்ட அங்க இருக்கிற ஒரு அதிகாரி கணிசமா, 'கட்டிங்' வாங்கிட்டு, அதிகாரிகள் விரும்பிய இடங்களுக்கு பணியிடங்களை மாத்தி குடுத்துட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''விஜயராஜ், இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


வாசகர் கருத்து (2)

  • Godyes - Chennai,இந்தியா

    பெரிய இடத்தில கமிஷன் கட்டிங் நோ கரப்ஷன். அதுக்குள்ளே கீழ் மட்டத்தில் இருந்து அது கட்டிங் கரப்ஷனாகி மேலிடம் கமிஷன் ஆகிறது.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திராவிட மாடலுக்கு மாற்று மாடல் அவசியம்தான் - ஆனால் சந்தர்ப்ப வாதிகளை மட்டும் வைத்து ஜெயித்து விட முடியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்