Load Image
Advertisement

லஞ்சப்பணத்தை திருப்பிக் கொடுத்த வி.ஏ.ஓ., உதயநிதி: வரவேற்புல களைகட்டிய கோஷ்டி!

 The VAO who returned the bribe, the group that weeded the reception of Udhayanidhi!    லஞ்சப்பணத்தை திருப்பிக் கொடுத்த வி.ஏ.ஓ., உதயநிதி: வரவேற்புல களைகட்டிய கோஷ்டி!
ADVERTISEMENT
ஹாலில் அமர்ந்து, 'டிவி'யில் சென்னை மழை நிலவரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா, மழையில நம்ம தலைநகரமே மிதக்குதாமே,'' என்றபடி, காய்கறியை, ரெப்ரிஜிரேட்டருக்குள் அடுக்கி வைத்தாள்.

''மித்து, தி.மு.க., இளைஞரணி கூட்டத்துக்கு போயிருந்தீயே, என்ன ஸ்பெஷல்...'' என, பேச்சை ஆரம்பித்தாள் சித்ரா.

''செந்தில்பாலாஜி, 'ஒன் மேன் ஆர்மி' மாதிரி, கோவையை அவரோட கட்டுக்குள்ளே வச்சிருந்தாரு. அவர் இல்லாம நடந்த முதல் கூட்டம்; எப்படி இருக்குமோன்னு, கவலை இருந்துச்சாம். என்ன செய்யப் போறாங்கன்னு, சீனியர் அமைச்சர்களும் கவனிச்சிட்டு இருந்துருக்காங்க,''.

''பாராளுமன்ற கோட்டை போல, முகப்பு அலங்காரம் அமைச்சிருந்தாங்க; 20 ஆயிரம் இருக்கை வசதி செஞ்சு, பந்தலை சுத்தியும் கொடி கட்டியிருந்தாங்க; மழையால பாதிப்பு வரக்கூடாதுன்னு கூடாரம் அமைச்சு, நடத்திக் காண்பிச்சிருக்காங்க. ரூ.3.37 கோடி நிதி திரட்டி கொடுத்திருக்காங்க,''

ஆளுங்கட்சிக்குள்ளே கோஷ்டி''ஆளுங்கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டி இருக்குதாமே. உதயநிதிக்கு தனித்தனியா வரவேற்பு கொடுத்ததா சொன்னாங்களே...''

''ஆமாக்கா, உண்மைதான்! ஊட்டிக்கு போன உதயநிதிக்கு, காரமடை கிழக்கு ஒன்றிய நிர்வாகி, தென்திருப்பதி நால் ரோட்டுல தனியாவும், மேற்கு ஒன்றிய நிர்வாகியும், மேட்டுப்பாளையம் நகர நிர்வாகிகளும் இணைஞ்சு, பஸ் ஸ்டாண்டுலயும் தனித்தனியா வரவேற்பு கொடுத்தாங்க,''

''இதே மாதிரி நிலைமை போச்சுன்னா... நீலகிரி எம்.பி., தேர்தல்ல, ஆளுங்கட்சி வெற்றிக்கு பாதிப்பு வரும்னு, உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க.

நீலகிரியில மறுபடியும் ராசாவே போட்டி போடப்போறதா சொல்றாங்க. தொகுதிகளை தயார்படுத்த மேலிடம் சிக்னல் கொடுத்திருச்சாம்.

அதனால, அதிருப்தியாளர்களை சரிக்கட்டுறதுக்கு, கட்சிக்குள்ள யாரெல்லாம் உள்குத்து வேலை பார்ப்பாங்கன்னு, 'லிஸ்ட்' எடுக்கச் சொல்லியிருக்காராம்,'' என்ற மித்ரா, ''பூ மார்க்கெட் ஏரியாவுக்கு போக வேண்டியிருக்கு; வர்றீங்களா' என கேட்டாள்.

''கண்டிப்பா... வர்றேன்,'' என்ற சித்ரா, ஹெல்மெட் அணிந்து கொண்டு, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

இரண்டு ஆண்டில் சம்பாத்தியம்''எம்.பி., எலக்சன்ல போட்டி போடுறதுக்கு, உடன்பிறப்புகள் பலரும் பெட்டி பெட்டியா கரன்சி வச்சுக்கிட்டு, 'சீட்' வாங்குறதுக்கு ஆர்வத்தோட இருக்காங்களாமே...'' என கேட்டாள்.

''ஆமா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மாவட்ட அளவுல இருக்கிற ஆளுங்கட்சி நிர்வாகிகள் ரகசிய விசாரணை நடத்தியிருக்காங்க. அப்போ, எம்.பி., எலக்சன்ல போட்டியிடுறதுக்கு யாருக்கெல்லாம் விருப்பம் இருக்குன்னு கேட்டிருக்காங்க. கிளை செயலாளர்ல ஆரம்பிச்சு, பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாற்றுக்கட்சியில இருந்து தாவி வந்தவங்க பலரும், 'சீட்' கேட்டிருக்காங்க,''

''அதைக்கேட்ட மாவட்ட நிர்வாகிங்க, சட்டசபை தேர்தலா இருந்தா கூட ஏத்துக்கிடலாம்; பாராளுமன்ற தேர்தலுக்கு கோடிக்கணக்குல செலவழிக்கணுமே; சின்ன பொறுப்புல இருக்குறவங்க, அவ்ளோ பணம் வச்சிருக்காங்களா. ஆட்சிக்கு வந்த ரெண்டே வருஷத்துலேயே, இந்தளவுக்கு 'சம்பாத்தியம்' பார்த்துட்டாங்களான்னு யோசிக்கிறாங்களாம்,''

நகைக்கொள்ளையில் மர்மம்காந்திபுரத்தை கடந்து, கிராஸ்கட் ரோடு வழியாக சென்றபோது, ''நகைக்கொள்ளையில 'அப்டேட்' ஏதாச்சும் இருக்கா, தனிப்படை எங்கே போயிருக்கு,'' என கேட்டாள் மித்ரா.

''தர்மபுரிக்கு போன தனிப்படை, கொள்ளையனின் மாமியாரை 'அரெஸ்ட்' பண்ணியிருக்கு. ஒய்ப் நர்மதா, இலங்கை தமிழர். தர்மபுரியில இருக்குற மறுவாழ்வு முகாமுல வசிச்சவங்க, ஆனைமலைக்கு எப்போ வந்தாங்க; அனுமதி வாங்கிட்டு வந்தாங்களான்னு, விசாரணை நடந்துக்கிட்டு இருக்குதாம்,''

''ஓகோ,''

''ஏன்னா, மறுவாழ்வு முகாமுல வசிக்கிறவங்க, குறிப்பிட்ட எல்லையை கடந்து போகக்கூடாது; முகாம் அதிகாரிகிட்ட பர்மிஷன் வாங்கியிருக்கணும்; வேலைக்கு போறவங்களா இருந்தாலும் ராத்திரிக்குள்ளே வீடு திரும்பணும்னு ரூல்ஸ் இருக்கு. கொள்ளையனை கைது செஞ்சாதான், என்ன நடந்துச்சுன்னு, தெளிவா சொல்ல முடியும்னு போலீஸ்காரங்க சொல்றாங்க,''

நகை மீட்புக்கு போலீஸ் லஞ்சம்''தனிப்படை அமைச்சு, நகையை மீட்டுக் கொடுத்ததுக்கு, போலீஸ் தரப்புல பணம் கேட்டாங்களாமே...''

''அதுவா, மூனு வாலிபர்கள் சேர்ந்து, தன்னோட நகைகளை வழிப்பறி செஞ்சுட்டதா, குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு லேடி புகார் கொடுத்தாங்க. போலீஸ் தரப்புல தனிப்படை அமைச்சு, வழிப்பறி திருடன்களை பிடிச்சு, நகையை மீட்டுட்டாங்க...''

''புகார் கொடுத்த லேடியோட ஹஸ்பெண்டை கூப்பிட்டு, 'தனிப்படைக்கு ஏகப்பட்ட செலவாகிடுச்சு; 'கவனிச்சிட்டு' போங்கன்னு' குறிப்பிட்ட தொகையை கேட்டிருக்காங்க. இதே மாதிரி, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் புகார் கொடுக்க வர்றவங்ககிட்டயே கேக்குறாங்களாம்,''

கவுன்சிலர்கள் மீது புகார்கிராஸ்கட் ரோட்டில் இருந்த மாநகராட்சி பள்ளியை பார்த்த மித்ரா, ''கார்ப்பரேஷன்ல ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேல, ஏகப்பட்ட புகார் வருதாமே...'' என கேட்டாள்.

''அதுவா... சவுத் ஜோன்ல இருக்குற ஒரு கவுன்சிலர், மார்க்கெட்டுல அடாவடி வசூல்ல ஈடுபடுறாரு. இதுசம்பந்தமான கம்ப்ளைன்ட், முந்தைய கமிஷனர் கவனத்துக்கு போச்சு. விசாரணையில அது உண்மைன்னு தெரிஞ்சதும், தகுதியிழப்பு செய்றதுக்கு நிர்வாக ரீதியா ஆலோசனை செஞ்சாங்க.

இதை கேள்விப்பட்ட, ஆளுங்கட்சியை சேர்ந்த மத்த கவுன்சிலர்கள், பிரச்னையை கமுக்கமா அமுக்கிட்டாங்க. அந்த கவுன்சிலர் மறுபடியும் வசூலை ஆரம்பிச்சிட்டாராம்,''

கிடைத்தது 'ஸ்வீட் மணி'''போன வாரம் நாம பேசுனது சம்பந்தமா, 'என்கொயரி' நடந்துச்சாமே...''

''அதுவா... தீபாவளிக்கு பெட்டி, பெட்டியா ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டு, பணம் கொடுக்காம, ஸ்வீட் கடை ஓனரை அலைய விடுறது சம்பந்தமா, வடக்கு தாலுகாவுல இருந்த அதிகாரியை கூப்பிட்டு, ரெவின்யூ லேடி ஆபீசர் கண்டிச்சாங்களாம். சம்பந்தப்பட்ட ஸ்வீட் கடை ஓனருக்கு, ஒரே நாள்ல பணம் பட்டுவாடா செஞ்சுட்டாங்க,''

''அதே மாதிரி, கிடாவெட்டு போடுறதா சொல்லி இருந்த அதிகாரி, தேவையில்லாம சர்ச்சையில சிக்கிறக் கூடாதுன்னு உஷாராகி, நேரு ஸ்டேடியம் பக்கத்துல இருக்கற பிரியாணி கடைக்கு ஊழியர்களை அழைச்சுட்டு போயி, தடபுடலா விருந்து வச்சு அசத்தியிருக்காரு,''

திரும்பி வந்தது லஞ்சப்பணம்''வாங்குன லஞ்சப்பணத்தை ஒரு வி.ஏ.ஓ., திருப்பிக் கொடுத்துட்டாராமே...''

''ஆமா... உண்மைதான்! வடக்கு கோட்டாட்சியர் எல்லைக்கு உட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு ஒரு லேடி, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க போயிருக்காங்க. அங்கிருந்த ஒருத்தர் லஞ்சமா, 4,000 ரூபாயை, 'ஜிபே' அனுப்பச் சொல்லியிருக்காரு; அந்த லேடியும் பணம் அனுப்பிட்டாங்க,''

''ரெண்டு நாளைக்கு பிறகு, பட்டா மாறுதல் உத்தரவு வாங்க போயிருக்காங்க. அவரை உக்கார வச்சு, பேசிக்கிட்டு இருந்திருக்காங்க.

அப்போ, 'போன வருஷம் லஞ்சம் கொடுத்து ஒரு அதிகாரியை சிக்க வச்சது, என்னோட பிரெண்டுதான்'ன்னு அந்த லேடி, கேஷூவலா சொன்னதும், வி.ஏ.ஓ., ஷாக் ஆயிட்டாராம். கொஞ்ச நேரத்துல, அந்த லேடிக்கு மறுபடியும் 'ஜிபே' மூலமாவே பணத்தை திருப்பிக் கொடுத்துட்டாராம்,''

லஞ்சம் வாங்குவதில் பி.எச்டி.,''ஆனா, லஞ்சம் வாங்குறதுல பாரஸ்ட்காரங்களுக்கு, பி.எச்டி., பட்டமே கொடுக்கலாம்னு விவசாயிங்க சொல்றாங்களே,''

''ஏன்... என்னாச்சுப்பா...''

''வனத்தை ஒட்டியிருக்கிற, விவசாய நிலத்துக்குள்ள அடிக்கடி யானை கூட்டம் நுழையுது. யானைகளை வர விடாம தடுக்கணும்னு, குறிப்பிட்ட தொகை கொடுக்கணும்னு தோட்டத்துக்காரங்கள்கிட்ட, பாரஸ்ட்காரங்க பேரம் பேசுறாங்களாம்.

அவுங்க கேக்கற தொகையை கொடுத்துட்டா, யானை கூட்டம் வராம தடுக்கறாங்களாம். கரன்சி கொடுக்கலைன்னா, கண்டுக்காம இருந்துடுறாங்களாம். தோட்டத்துக்குள்ள புகுந்து, விளைநிலங்களை சேதப்படுத்துன பிறகு, சாவகாசமா வந்து, யானை கூட்டத்த விரட்டுறாங்களாம். இதனால, பாரஸ்ட்காரங்க மேல, தோட்டத்துக்காரங்க கடுங்கோபத்துல இருக்காங்க,''

கரன்சி கொடுத்தால் ஆர்டர் ரெடி''லட்சக்கணக்குல கரன்சியை அள்ளிக் கொடுத்தா, வீட்டுக்கே போயி, ஆர்டர் நகல் கொடுக்குறாங்களாம்...''

''அப்படியா... '' என, வாயை பிளந்தாள் மித்ரா.

''மித்து! தொண்டாமுத்துார், தாளியூர், வேடபட்டி ஏரியாவுல கட்டட வரைபட அனுமதி வேணும்னா, லஞ்சமா லட்சக்கணக்குல கரன்சி அள்ளிக் குடுக்கணும். அப்படி குடுத்துட்டா சம்பந்தப்பட்ட அதிகாரியே, வீட்டுக்கு வந்து, ஆர்டர் நகல் குடுத்துட்டு போறாராம். ஆளுங்கட்சி நிர்வாகி சப்போர்ட் இருக்கறதுனால, ஆபீசர்ஸ் பல பேரும் லஞ்ச வேட்டையை வெளிப்படையாவே செய்றாங்களாம்,''

''நொய்யல் ஆத்துல இப்போ தண்ணீ போறதுனால, பள்ளவாரி ஓடையில மணல் அள்ள ஆரம்பிச்சிட்டாங்க.

ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருத்தர் மட்டும், 16 லோடு மணல் கடத்தியிருக்கிறதா கணக்கு சொல்றாங்க. ஆனா, ரெவின்யூ ஆபீசர்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலை; போலீஸ்காரங்களும் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க,''

ஆறாக ஓடுகிறது 'பார்' வசூல்''டாஸ்மாக் மாமூல் போலீஸ்காரங்க அள்ளுறாங்களாமே,''

''ஆமா... டாஸ்மாக் 'பார்'களுக்கு டெண்டர் தள்ளிப் போனதுல, மது விலக்குப் போலீசார் காட்டுல மாமூல் மழை அடிச்சு ஊத்துது. கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்டத்துல, 69 கடைகள்ல 'இல்லீகல் பார்' நடக்குதாம். ஒரு பாருக்கு, இன்ஸ்.,க்கு மட்டும், 45 ஆயிரம் ரூபா மாமூல் கொடுக்கணுமாம். மத்த போலீஸ்காரங்க, லோக்கல் ஸ்டேஷனுக்குக் கொடுக்குறது தனிக்கணக்காம்,''

''அ.தி.மு.க., ஆட்சியில, டாஸ்மாக் 'பார்'கள்ல வசூல் பண்ற எம்.எல்.ஏ.,வுக்கு, வலதுகரமா இருந்த கடவுள் பேரைக் கொண்டவரே, இந்த இன்ஸ்.,க்கும், ஆளும்கட்சி மாவட்டத்துக்கும் 'பார்'கள்ல வசூல் பண்ணிக் கொடுக்குற வேலையைப் பார்க்குறாராம்,''

''வெள்ளக்கிணறு ரயில்வே கேட் பக்கத்துலயும், நல்லாம்பாளையத்துலயும் ரெண்டு பார்களை எப்.எல்., 2 பார் மாதிரி பிரமாண்டமா, இல்லீகலா நடத்திட்டு இருக்காராம். இந்த கடைங்க சார்புல, கவர்மென்ட்டுக்கு பணம் கட்டியே, ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்குமாம்.

கார்டன், குடில் சகிதமா சீட்டாட்டம் நடக்குதாம். விடிய, விடிய 'சரக்கு' சப்ளை நடக்குதாம். இந்த 'கடவுளுக்கு' 'தொண்டாமுத்துார்காரர்' முழு சப்போர்ட்டாம்,'' என்றபடி, பூ மார்க்கெட் அருகே, ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement