Load Image
Advertisement

புதுச்சேரி பிராந்திய கடற்கரை பகுதிக்கு செல்ல... தடை; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Puducherry Regional Coastal Area... Prohibited; Advise the public to stay safe   புதுச்சேரி பிராந்திய கடற்கரை பகுதிக்கு செல்ல...  தடை;   பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
ADVERTISEMENT

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் சின்னம் நாளை நெல்லுார் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் கன மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனாமில் கனமழை



ஏனாமில் அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல துறைகள் அடங்கிய குழு அங்கு விரைந்துள்ளது. புயலால் பாதிக்கப்படும் மக்களுக்காக புதுச்சேரியில் 211, காரைக்காலில் 78, ஏனாமில் 16 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மட்டுமின்றி, காரைக்கால், ஏனாமில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாமிட்டு மீட்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறது.

முடங்கிய மக்கள்



புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் மழைக்கு பயந்து, வீட்டிலேயே முடங்கினர். புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல், விடுதிகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வெறிச்சோடியது:



வழக்கமாக ஞாயிற்றுகிழமை மார்க்கெட், வணிக வளாகங்கள் நிறைந்த சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் களைகட்டும். ஆனால் விட்டு விட்டு மழை பெய்வதால் வணிக வளாகங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சண்டே மார்க்கெட்டும் களை இழந்து காணப்பட்டது.

அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் காந்தி வீதி, நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாதுகாப்பாக இருங்க:



புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை புதுச்சேரி அரசும் பேரிடர் மேலாண்மை துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், புயல் தாக்கும் போது வீட்டின் மின்சாரத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அவசரகால உபகரணங்களை அருகில் வைத்துக் கொள்ளவும். பேட்டரி ரேடியோ மூலம் புயல் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். இனி பாதிப்பு இல்லை என கூறும் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும் என, அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று, புயலுக்கு பின்., வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது மின்சார வயர்கள் அறுந்து கிடந்தால் உடனே மின்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பின் குடிக்க வேண்டும். புயலால் வீடு சேதமடைந்திருந்தால் உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்களுக்கான உதவியை பெறலாம்.

புயல் கரையை கடக்கும் வரை பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.

144 தடை உத்தரவு



புயல் காரணமாக புதுச்சேரி பிராந்தியத்தில்கடலோர பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தினை தடை செய்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில், புயல் காரணமாக 3ம் தேதி இரவு 7:00 முதல் 5ம் தேதி அதிகாலை 6:00 மணி வரை புதுச்சேரி பிராந்திய கடலோர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 கீழ் தடை செய்யப்படுகிறது.

இதனை மீறுவோர்கள் மீது ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் புதுச்சேரி கடற்கரை சாலை உடனடியாக மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement