Load Image
Advertisement

சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு... அனுமதி; ரூ. 270 கோடியில் திட்ட பணிகள் தயாரிப்பு தீவிரம்

Central Government... approval for tourism development projects; Rs. 270 crore project work preparation intensity    சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு...  அனுமதி; ரூ. 270 கோடியில் திட்ட பணிகள் தயாரிப்பு தீவிரம்
ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரியில் சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 270 கோடி மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள, மத்திய சுற்றுலா அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.

புதுச்சேரி சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. மாநிலத்தின் வருவாய் சுற்றுலாத்துறை நம்பி உள்ளது. அதனால் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சுற்றுலா துறையை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அமைதியான சூழல், அழகிய கடற்கரை, ஆரோவில், படகு குழாம் என ஏராளமான சுற்றுலா தளங்களை கொண்டுள்ளதால் பல்வேறு வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வார முழுதும் புதுச்சேரியில் குவிகின்றனர்.

புதுச்சேரி சுற்றுலா துறையை மேம்படுத்த கடந்த காலத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிதி உதவியுடன் ரூ. 133 கோடி மதிப்பில், சுதேசி தர்ஷன் திட்டத்தில், பழைய சாராய ஆலையை இடித்து விட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் வசதியுடன் கூடிய கலாச்சார மையம், மெரினா கடற்கரை, ரூபி கடற்கரை, திருக்காஞ்சி கோவில், வில்லியனுார் கோவில், ஒயிட் டவுன் பகுதியில் அழகிய மின் விளக்குகள், கிரானைட் நடைபாதைகள் அமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகளுக்கு தேவையான மேலும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.

சுதேசி தர்ஷன் என்ற திட்டம் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு, சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் சுதேசி தர்ஷன் 2.0 திட்டமும், ஆன்மீக தளங்களை மேம்படுத்த சுதேசி பிரசாத் திட்டமும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இதில், சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்திற்கு ரூ. 160 கோடியும், சுதேசி பிரசாத் திட்டத்திற்கு ரூ. 110 கோடி வழங்க மத்திய சுற்றுலா அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய திட்ட பணிகளை சுற்றுலாத்துறை, பொதுப்பணித் துறையுடன் இணைந்து திட்டம் தயாரித்து வருகிறது. இதற்காக இரண்டு தனியார் நிறுவனம் மூலம் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ், சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் கடற்கரையில் ரூ. 20 கோடி மதிப்பில், படகு நிறுத்தும் தளம், காபி பார், ரெஸ்டாரண்ட், சோலார் மின் வசதியுடன் கூடிய வெயிட்டிங் ஹால், பேரடைஸ் கடற்கரையில் நிரந்தர கட்டடமாக கழிப்பறை, குளியல் அறை, படகு கட்டும் தளம் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளது.

இதுபோல் காரைக்கால் கடற்கரையில் ரூ. 20 கோடி மதிப்பில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவற்றை 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மற்றும் இயக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக கனகன் ஏரி, ஆயிகுளம், ஆலங்குப்பம் ஏரிகளை மேம்படுத்தி நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது. இதுதவிர கடற்கரை சீகல்ஸ் உணவகத்தையும் மேற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நகர பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மல்டிலெவல் கார்பார்க்கிங் வளாகம், சுத்தமான கழிப்பறைகள், ஆர்.ஒ., வாட்டர் பிளான்ட்கள் அமைக்க திட்டம் தயார் செய்துள்ளனர். இத்திட்ட அறிக்கை இன்னும் ஒரிரு மாதத்தில் முடித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இத்திட்டங்களுக்கு முதல்வர் தலைமையிலான மாநில கமிட்டி, உள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அனுமதி அளித்த பின்பு, மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சகம் அதனை ஏற்று அதற்கான நிதியை புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு வழங்கும்.

இத்திட்டங்களை 24 மாதத்திற்குள் முடிக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதனால் சுதேசி தர்ஷன் 2.0 திட்டம் தயாரிக்கும் பணிகளை சுற்றுலாத்துறை விரைவுப்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement