Load Image
Advertisement

தடையற்ற மருத்துவப் பணியே எனக்கான அஞ்சலி..


Latest Tamil News

நான் இறக்கும் போது மருத்துவமனையின் வேலை நாளாக இருந்தாலும், மருத்துவமனைக்கு விடுமுறை விட்டுவிடாமல், நம்பி வந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கவேண்டும், வேண்டுமானால் சட்டையில் ஒரு கருப்பு பட்டையை குத்திக் கொள்ளுங்கள் அது போதும் என்றவர்தான் நேற்று( 21/11/2023) இறந்த சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பத்ரிநாத்,

அவரது விருப்பப்படியே நேற்று பணியாளர்கள் அனைவரும் சட்டையில் ஒரு கருப்பு பட்டையை அணிந்தபடி மருத்துவப்பணிகளை மேற்கொண்டனர்.

டாக்டர் பத்ரிநாத்

சென்னையில் பிறந்து இங்கேயே மருத்துவம் படித்தவர்,கண் தொடர்பான உயர் படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார், அவரது திறமையை மதித்து அதிக சம்பளம் மற்றும் சலுகைகளுடன் அங்கேயே இருக்கும்படி அமெரிக்கா மருத்துவமனை வேண்டுகோள் விட்டபோதும் இந்தியாவில் பணியாற்றவே விருப்பம் என்று கூறி தாய்நாடு திரும்பியவர்.

இந்தியா வந்தபின் தனியார் மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.

1974 ஆம் ஆண்டு காஞ்சி பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கண் சிகிச்சை வழங்கினார்.அவரது சந்திப்பிற்கு பின் தன் வாழ்க்கையை ஏழை எளிய மனிதர்களுக்காக அர்ப்பணித்துக்கொள்ள முனைந்தார்.
Latest Tamil News
அந்த நோக்கத்தில் லாப நோக்கமற்ற அமைப்பாக சங்கர நேத்ராலயா மருத்துவமனையை துவக்கினார்.மருத்துவமனையின் தன்னமலற்ற சேவையின் காரணமாக இந்தியா முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகை தரஆரம்பித்தனர்.

இன்றைக்கு சங்கர நேத்ராலயா ஒரு நாளைக்கு 1200 நோயாளிகளுக்கு கட்டணமில்லா சிகிச்சையை வழங்கிவருகிறது,சராசரியாக100 அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகிறது. 80 சதவீதம் இலவசம் 20 சதவீதம் கட்டணம் என்றளவில் வரும் நோயாளிகளிடம் பணம் பெறப்படுகிறது, இதுவரை 18 லட்சம் கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இங்கு வழங்கப்படும் உயர்தர சிகிச்சையில் ஏழை,பணக்காரர் வித்தியாசம் கிடையாது எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான்.பார்வை இல்லை என்ற காரணத்திற்காக யாரும் பார்வையை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய கண் சிகிச்சை மையமாக உருவெடுத்த சங்கர நேத்ராலயாவின் சேவைத்தன்மையைப் பார்த்து பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா போன்ற பலர் தங்களது சொத்தின் பெரும்பகுதியை மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

சென்னையில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையை ஏற்படுத்தினார்.மாணவர்கள் பார்வை இழப்பை தடுக்க ஊர் ஊராக கிராமம் கிராமமாக உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்களை நடத்திவந்தார்.கண்தானம் செய்வதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

இவருக்கு பத்மஸ்ரீ,பத்மபூஷன் உள்ளீட்ட உயர்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

தனது 79 வயது வரை கண் சிகிச்சை வழங்கிவந்த இவர் தனது பெயரோ,பேட்டியோ,படமோ ஊடகத்தில் வருவதற்கு விருப்பம் காட்டியது இல்லை.கடந்த நான்கு ஆண்டுகளாக மூப்பின் காரணமாக ஒய்வில் இருந்தார். கடந்த செவ்வாயன்று அதிகாலை துாக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்தது.

இவரது மறைவை அறிந்து கண்ணொளி பெற்ற பல லட்சம் ஏழை, எளியவர்களின் கண்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது.

-எல்.முருகராஜ்


வாசகர் கருத்து (7)

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மிக அருமையான பதிவு. சென்னை மட்டும் அல்லாது மற்ற மாவட்டங்களிலும் தொண்டுநிறுவனங்கள் எங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்களா அன்வெல்லாம் இவர் மருத்துவமனை குழுமம் வந்து பரிசோதித்து பாதிக்கப்பட்டவர்களை அன்றைய தினமே இலவசமாக தங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்து , நல்ல உணவு மற்றும் தரமான மருத்துவ பணிசெய்வதில் இவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று கூறலாம், தினமலர் மற்றும் திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி. வந்தே மாதரம்

 • Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா

  இன்று அது லாப நோக்க மருத்துவ மனையாக செயல் படவில்லை. மதுரை அரவிந்த் மருத்துவமனையை வேண்டுமானால் அவ்வாறு கூறலாம்.

 • sankaran - hyderabad,இந்தியா

  தமிழர்கள் இன்னமும் திராவிட மாயையில் இருந்து கண் திறக்கவில்லை... பத்ரிநாத் மிக அமைதியான மனிதர்... அமைதியாக பெரிய கார்யங்களை சாதித்து காட்டியவர்...

 • naadodi - Dallas,யூ.எஸ்.ஏ

  பரோபகாரம் இதம் சரீரம் என்ற வேத வாக்கின் படி வாழ்ந்திட்ட வித்தகருக்கு வந்தனங்கள்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  எவ்வளவு பேரின் வாழ்க்கை இவ்வளவு புண்ணியார்தம் நிறைந்ததாக உள்ளது.நிறய பேர் இவர் போல் வரவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement