Load Image
Advertisement

தேர்தலில் கவர்ச்சி அறிவிப்பு: மாறிய பா.ஜ., அணுகுமுறை

 Glamor announcement in elections: BJPs changed approach    தேர்தலில் கவர்ச்சி அறிவிப்பு: மாறிய பா.ஜ., அணுகுமுறை
ADVERTISEMENT
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில்,சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசத்திற்கானதேர்தல் நடந்து முடிந்து விட்டது. ராஜஸ்தான், தெலுங்கானாவுக்கான தேர்தல் வரும், ௨௩ மற்றும், ௩௦ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் தேர்தல் களத்தில் உள்ள பா.ஜ., - காங்., கட்சிகளும் மற்ற சில மாநில கட்சிகளும், சமீபத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டன. அதில், பல கவர்ச்சி அறிவிப்புகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மத்திய பிரதேசமாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை, பா.ஜ., சமீபத்தில் வெளியிட்டது.

அதில், ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவியருக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி. கோதுமை, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு, 450 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர் உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், ௨௫ லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும், ௧,௫௦௦ ரூபாய் உதவித்தொகை, ௫௦௦ ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர் போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதேபோன்றே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பல கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. லோக்சபா தேர்தல் நடைபெற, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என இரு அரசியல் கட்சிகளும், ஐந்து மாநில தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமின்றி, மத்தியிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில், ௨௦௦௩ முதல் தற்போது வரை, இடையில், ௨௦௧௮ இறுதி முதல் ௨௦௨௦ மார்ச் வரையிலான, ௧௫ மாத காலம் தவிர, மற்ற காலத்தில் எல்லாம், பா.ஜ., ஆட்சியில் இருந்து உள்ளது. அப்போதெல்லாம், மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள், சலுகைகளை வாரி வழங்கி இருக்கலாம். அதைச் செய்யாமல், தற்போது காங்கிரசின் கடும் போட்டியை முறியடிக்க கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

'அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல' என, கடந்த ஆண்டு பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அதாவது, இலவச அறிவிப்புகள், மாநில அரசின் நிதி நிலைமையை சீர்குலைப்பதோடு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பெரும்நெருக்கடியை ஏற்படுத்தும் என, எச்சரித்தார்.

ஆனாலும், கர்நாடகாவில் இலவச திட்டங்களை வாக்குறுதியாக அளித்த காங்கிரசுக்கு மக்கள்ஓட்டளித்ததால், அக்கட்சி அங்கு ஆட்சியைப் பிடித்தது. இதனால் தான், தேர்தல் நடக்கும்மாநிலங்களில், கவர்ச்சி வாக்குறுதிகளை வழங்குவதில், காங்கிரசுக்கு போட்டியாக, பா.ஜ.,வும் இறங்கி விட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் என்ற இரு ஆயுதங்களை, எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு எதிராக, பிரதமர் மோடியும், பா.ஜ.,வினரும் இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன், வளர்ச்சி, அத்தியாவசிய உள்கட்டமைப்பு, இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் பேசி வருகின்றனர்.

இவை எல்லாம், எதிர்க்கட்சிகளின் கவர்ச்சி அறிவிப்புகளுக்கு முன், சமீபத்திய சில தேர்தல்களில் எடுபடாமல் போனதால், தங்கள் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக உருவாகி உள்ள அலையைபோக்கவும், மற்ற மாநிலங்களில் மக்களை கவரவும், கவர்ச்சி அறிவிப்புகள் முக்கியம் என்பதை, பா.ஜ.,வினர் உணர்ந்துள்ளனர்.

அதனால் தான், காங்கிரசுக்கு போட்டியாக, ஐந்து மாநில தேர்தல்களில், பா.ஜ.,வால், மக்களைகவரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றால், மாநிலங்கள் சந்திக்கப் போகும்பிரச்னைகள், அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement