நாம் அன்றாடம் பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களில், 9 சதவீதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும். இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் சில ஆண்டுகளில் மட்கி மண்ணுக்கு உரமாகும். ஆனால், பிளாஸ்டிக் மண்ணில் மட்க 1,000 ஆண்டுகளுக்கும் மேலாகும்.
நம் எதிர்கால சந்ததியினருக்கு பொருளாதாரம், தொழில்நுட்ப வளங்களை விட இயற்கை வளங்களின் தேவை தான் அதிகம். சுத்தமான காற்று, வளமான மண், நல்ல தண்ணீருக்கு தான் உலக நாடுகள் யுத்தம் புரியப் போகின்றன. இதை பற்றி குறைந்தபட்ச புரிதலும் விழிப்புணர்வும் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழலை காக்க முடியும்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த வல்லரசு நாடுகள், சூழலுக்கு உகந்த பொருட்களை இறக்குமதி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அந்நாட்டு மக்களும் இயற்கை மூலப்பொருட்களின் உற்பத்தி பொருட்களுக்கு எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக இருக்கின்றனர்.
ஆனால், நம் நாட்டில் நிறைய இயற்கை வளங்களை வீணாக்கி கொண்டிருக்கிறோம். வேளாண் கழிவுகளில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரித்தால் உலக நாடுகளின் சந்தைகள், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கின்றன.
வேளாண் கழிவுகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வாழை பயிரிடப்படுகிறது. வாழைநாரில் இருந்து நிறைய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கலாம். தரைவிரிப்புகள், ஆடைகள், கூடை, மெத்தைகள், கைப்பை, பர்ஸ் தயாரிக்கலாம். பாக்குமரங்களில் இருந்து பாக்குமட்டை தட்டு தயாரிப்புக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதற்கு உற்பத்தி செலவும் மிக குறைவு என்பதால் மகளிர் சுய உதவிக்குழுக்கள், சுய தொழில் புரிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, அரசு சார்பிலும், பல்வேறு நிறுவனங்களும் பயிற்சிகள் அளிக்கின்றன.
கால்நடை வளர்ப்பில், மாடுகளின் சாணம், கோமியத்தை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யலாம். 'பச்சை தங்கம்' என அழைக்கப்படும் சாணம் சிறந்த கிருமிநாசினி. இதில் இருந்து திருநீறு தயாரிப்பதோடு கொசுவர்த்தி சுருள், பூந்தொட்டி, தோட்ட பயன்பாட்டு பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தலாம். தவிர, உணவுப்பொருட்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால், அதிக லாபம் ஈட்டலாம்.
ஏற்றுமதி துறையில் ஈடுபடும் பல நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர் கிடைத்தும் உற்பத்தி செய்து கொடுக்க தகுதியான ஆட்கள் இல்லாமல் தடுமாறுகின்றன. வேளாண் கழிவுகளை முதலீட்டாக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மிடம் கைவசம் உள்ளன. உலக நாடுகளும் சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்காத பொருட்களை வாங்கவே தயாராக இருக்கின்றன. தரமான தயாரிப்புகளை கொடுக்க வேண்டியது மட்டுமே, நம்முடைய கடமையாக இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால், உலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தொழில் புரியலாம்.
கனவு திட்டம்
நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். பாக்குமட்டை தட்டு, வாழைநாரில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து, 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். அவ்வகையில், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டாவுடன், 'உகாண்டியா' என்ற பெயரில் தொழில் ஒப்பந்தம் செய்துள்ளேன். உகாண்டாவின் இயற்கை வேளாண் கழிவு மூலப்பொருட்களையும், இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் வேளாண் மதிப்பு கூட்டு பொருட்களையும் சேர்த்து, ஐரோப்பிய நாடுகளுக்கு சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளேன்; திட்டத்திற்கான பணிகள் நடக்கின்றன.
கோவையில் இருந்து கொண்டு, உலகநாடுகளுடன் சந்தைப்படுத்துதலில் ஈடுபடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், இளைஞர்கள் ஏற்றுமதி துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
வாய்ப்புகள்
தொழில்முனைவோராக வேண்டுமெனில் உலக நாடுகளின் தேவைகளை அறிந்திருக்க வேண்டும். சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களுக்கு உலக நாடுகளின் சந்தைகளில் வரவேற்பு இருப்பதால் இளைஞர்கள் இத்துறையை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும். இந்தியா, தொழில் துறையில் முன்னிலை வகிக்கவும் ஏற்றுமதி துறையில் வலுவாக கால்பதிக்கவும், பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
மத்திய அரசின், வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் சார்பில், சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்முனைவோருக்கு எந்த பிணையமும் இன்றி, 2 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. ஆண்டுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது.
மாநில அரசு சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, போதிய அளவு மானியம் வழங்கப்படுகிறது. தொழில் மானிய திட்டங்களுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை, அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். மாவட்ட வாரியாக உள்ள தொழில் மையம் வாயிலாக கடனுதவி திட்டங்களை அறியலாம்.
எந்த துறையில் தொழில் துவங்குவதாக இருந்தாலும், முறையான பயிற்சி அவசியம். ஏற்றுமதி துறையில் உள்ள நிறுவனங்களில், ஓராண்டு பயிற்சி பெற்று, தொழில் நுணுக்கங்களை கற்று கொள்ள வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலையிலும், வேளாண் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தொழில் துவங்க, மூளை தான் வேண்டுமே தவிர முதலீடு அல்ல என்பதை உணர்ந்து, தொழில்நுட்பங்களை சரியாக கையாண்டால், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முதலாளி ஆகலாம்.
கட்டுரையாளர், இயற்கை விவசாயி.
'மேக் இன் இந்தியா' திட்டக்குழு
வாசகர் கருத்து (4)
அருமையான தகவல் , நன்றி தினமலர் மேலும் அதிக தகவல்களை திரட்டி தர முடியுமா
மொட்டை கடிதாசி
உங்கள் கோவை செய்தியாளர் கட்டுரையாளர் பெயரையே தெரிவிக்க மாட்டாரா?
எதில் "உறுப்பினர்"? ஐயா பெயர் என்ன? எந்த ஊர்? அவரது ஈமெயல் போன்ற முக்கிய விவரங்கள் இல்லையே? யார் வேண்டுமானாலும் கட்டுரையை தயாரித்திருக்கலாம், ஆனால் அதை அனுபவமிக்கவர்கள் பார்க்காகாமலா இதை பிரசுரகித்திருப்பார்கள்?