உத்தரகாசி : உத்தரகண்டில் தொழிலாளர்கள் கடந்த, 10 நாட்களாக சிக்கித்தவிக்கும் சுரங்கத்திற்குள், கேமராவை நுழைத்து, அவர்களது முகம் பார்த்த பின் அனைவரும் நலமுடன் இருப்பதை மீட்புப்படையினர் நேற்று உறுதி செய்தனர். தொழிலாளர்களின் குடும்பத்தினரும் அவர்களுடன் பேசியதை தொடர்ந்து, அங்கு ஒருவித நிம்மதியான சூழல் நிலவியது. 'விரைவில் நீங்கள் மீட்கப்படுவீர்கள்' என, தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி - யமுனோத்ரியை இணைக்கும் விதமாக, நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது, சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே இருந்த மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த 12ம் தேதி, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பாதையின் மறுமுனையில் பணியில் ஈடுபட்டு இருந்த, 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர்.
இடிபாடுகளுக்குள், 3 அடி விட்ட இரும்பு குழாயை நுழைத்து அதன் வழியே தொழிலாளர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
கடந்த 10 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டதால், உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.
தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் குழாய் வழியே வழங்கப்பட்டு வந்தாலும், தொழிலாளர்கள் நலமுடன் உள்ளனரா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், அவர்கள் முகம் பார்த்து நிலைமையை அறிந்து கொள்ள மீட்புக்குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக, 15 செ.மீ., விட்டம் உடைய குழாய், இடிபாடுகளுக்கு உள்ளே செலுத்தப்பட்டது.
கவலை வேண்டாம்
மீட்புக் குழுவினருக்கும், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு இடையே உள்ள, 174 அடி துார இடிபாடுகளை துளைத்துக் கொண்டு நேற்று முன்தினம் குழாய் உள்ளே செலுத்தப்பட்டது.
அந்த குழாய் வழியாக, தொழிலாளர்களுக்கு கிச்சடி உள்ளிட்ட உணவுகள் அனுப்பப்பட்டன.
அதன் பின், அறுவை சிகிச்சைகளின் போது உடலுக்குள் செலுத்தப்படும் சிறிய வகை, 'எண்டோஸ்கோப்பி' கேமரா, குழாய்க்குள் நேற்று செலுத்தப்பட்டது.
அந்த கேமரா நேற்று அதிகாலை 3:45 மணிக்கு தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதியை அடைந்ததும் வெளியில் உள்ள திரையில் அவர்களது முகங்கள் தெரிந்தன.
அனைவரும் நலமுடன் இருப்பதை பார்த்ததும், மீட்புக்குழுவினர் நிம்மதி அடைந்தனர்.
அந்த குழாய் வழியே ஏற்கனவே அனுப்பப்பட்ட வாக்கி டாக்கி கருவிகள் வாயிலாக, தொழிலாளர்களுடன் மீட்புக்குழுவினர் பேசினர்.
'அனைவரும் நலமுடன் இருக்கிறீர்களா? உங்கள் பதிலை உறுதி செய்ய ஒவ்வொருவராக கேமரா முன் வந்து முகத்தை காட்டி கையை துாக்கி புன்னகை செய்யுங்கள்' என, மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
உடனே, தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன் முகத்தை காட்டினர்.
'கவலை வேண்டாம். விரைவில் உங்களை மீட்டு விடுவோம்' என, மீட்புக்குழுவினர் நம்பிக்கை அளித்தனர்.
அதன் பின், தொழிலாளர்களின் உறவினர்களை அழைத்து, அவர்கள் நலமுடன் இருக்கும் காட்சிகளை காண்பித்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களுடன் உரையாடினர். இதை தொடர்ந்து குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
மீட்பு நடவடிக்கை குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி இரண்டாவது நாளாக விபரங்களை நேற்றும் கேட்டறிந்தார்.
'எண்டோஸ்கோப்பி கேமரா உள்ளே செலுத்தப்பட்ட விபரம் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதே நம் பிரதான குறிக்கோள் என, பிரதமர் தெரிவித்ததாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டார்.
இடிபாடுகளுக்குள் இரும்பு குழாய் நுழைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், சுரங்கத்துக்கு மேல் செங்குத்தாக குழாய் செலுத்தி தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்போதுள்ள சுரங்கத்துக்கு அருகிலேயே கிடைமட்டமாக மற்றொரு சுரங்கம் தோண்டுவது அல்லது சுரங்கத்தின் மற்றொரு முனையான பால்கோட் பகுதியில் இருந்து எதிர் திசையில் சுரங்கம் தோண்டுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஒடிசாவின் ரூர்கேலா ஸ்டீல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு தரம் வாய்ந்த இரும்பு குழாய்கள் விமானம் வாயிலாக நேற்று இரண்டாவது நாளாக எடுத்து வரப்பட்டன.
அதிக விட்டம் உடைய இந்த குழாய்களை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நிலச்சரிவு அபாயம்
இதற்கிடையே, மீட்பு பணிகளை மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து துளையிட்டால், சில நேரங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மலையின் சில பகுதிகள் மிகவும் மென்மையாக இருப்பதால், இந்த அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரோன் வாயிலாகவும், ரேபோட் வாயிலாகவும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணி நடக்கும் இடத்தில் செய்தி சேகரிக்கும் தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தல்:மீட்புப் பணிகள் நடக்கும் இடத்தை மிக நெருக்கமாக படம்பிடித்து ஒளிபரப்புவது நடந்து கொண்டிருக்கும் மீட்புப்பணிகளை மிக மோசமாக பாதிக்கும் சாத்தியம் உள்ளது.எனவே, சுரங்க பகுதியை மிக நெருக்கமாக படம் பிடித்து ஒளிபரப்பு வதையும், மீட்புப் பணிகள் குறித்து பரபரப்பான தலைப்பு செய்திகளை வெளியிடுவதையும் தனியார் டிவி சேனல்கள் தவிர்க்க வேண்டும். இது, தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் இதர பார்வையாளர்களின் மனநலனை பாதிக்கக்கூடும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!