வழக்கை வாபஸ் பெறாத இளம்பெண் வெட்டிக்கொலை
லக்னோ, உத்தர பிரதேசத்தில் மூன்று ஆண்டுக்கு முன் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர், தன் மீதான வழக்கை 'வாபஸ்' பெற மறுத்த நிலையில், தன் சகோதரருடன் சேர்ந்து நேற்று அந்த பெண்ணை வெட்டிக்கொலை செய்தார்.
உ.பி., மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள தேர்ஹா கிராமத்தைச் சேர்ந்த, 19 வயது இளம் பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன் பவான் நிஷாத் என்ற நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசில் பதியப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி பவான் நிஷாத், தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி வந்தார். ஆனால் அந்த பெண், வழக்கை வாபஸ் பெற மறுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று தேர்ஹா கிராமத்தில் வயலில் கால்நடைகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த பெண்ணை, பவான் நிஷாத், தன் சகோதரர் அசோக் நிஷாத்துடன் சேர்ந்து, பட்டப்பகலில் பொதுமக்கள் கண் எதிரே கோடரியால் வெட்டி கொலை செய்தார். பின்னர், அங்கிருந்து இருவரும் தப்பினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பவான், ஜாமினில் விடுதலையாகி வந்திருந்தார். அவரது சகோதரர் அசோக்கும் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஜாமினில் விடுதலை ஆகி இருந்தார்.
வழக்கை வாபஸ் பெற மறுத்த அந்த பெண்ணை கொலை செய்ய, இருவரும் சதி திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!