Load Image
Advertisement

இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல ஐ.சி.எம்.ஆர்., அறிக்கை வெளியீடு



புதுடில்லி, 'நாட்டில் ஏற்படும் இளம் வயதினர் இடையிலான திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல' என, ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின், நாட்டில் உள்ள அனைவருக்கும் இரண்டு 'டோஸ்' தடுப்பூசிகள் போடப்பட்டன.

போதைப் பழக்கம்



பெருந்தொற்று காலத்துக்கு பின், இளம் வயதினர் இடையிலான திடீர் மரணங்கள் அதிகரிக்கத் துவங்கின. தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவுகளே இதற்கு காரணம் என பேச்சு எழுந்தது. இதை மருத்துவர்கள் திட்ட வட்டமாக மறுத்தனர்.

இந்நிலையில், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது.

இதில், நாடு முழுதும் உள்ள 47 பல்நோக்கு மருத்துவமனைகள் பங்கேற்றன.

கடந்த 2021 மார்ச் முதல் 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், எந்த இணை நோய்களும் இல்லாமல், நல்ல ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருந்த, 18 - 45 வயது வரையிலான இளைஞர்களுக்கு திடீர் மரணம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதற்காக, இளம் வயதில் திடீர் மரணம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா, குணமடைந்த பின் உடல்நிலை எப்படி இருந்தது, தடுப்பூசி போட்டுக் கொண்டனரா, புகை, மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளவரா போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஆய்வின் முடிவில் ஐ.சி.எம்.ஆர்., வெளியிட்ட அறிக்கை:

இளம் வயதினர் இடையிலான காரணம் தெரியாத திடீர் மரணங்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறையும், குடும்பத்தின் மருத்துவ வரலாறும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய நோய்



புகை மற்றும் குடிப்பழக்கம், போதை பொருள் பயன்படுத்துவது, தொடர்ச்சியாக குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், உடலை கடுமையாக வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள் இதுபோல திடீரென, காரணம் தெரியாமல் உயிரிழந்துள்ளனர்.

இந்த பழக்கம் எதுவும் இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, தொடர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் திடீர் மரணம் அடைந்தது தெரியவந்துள்ளது.

மேலும், குடும்பத்தில் இது போன்ற காரணம் தெரியாத திடீர் மரணங்கள் நிகழ்ந்ததும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையே திடீர் மரணங்கள் குறைவாகவே ஏற்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாத பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த தீவிரத்தன்மையை குறைக்கவே தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவும் ஒரு சில மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

பெருவாரியாக ஒப்பிடுகையில், இளம் வயது திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement