ஜெய்ப்பூர், ஜாதிவாரி கணக்கெடுப்பு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் உட்பட, ராஜஸ்தான் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் வரும் 25ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தேர்தல் அறிக்கை
டிச., 3ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள காங்., தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்., தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவர் சி.பி.ஜோஷி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
பஞ்சாயத்து அளவிலான பணி நியமனங்களுக்கு புதிய கொள்கை வகுக்கப்படும், அரசுத்துறைகளில் நான்கு லட்சம் உட்பட, 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி வாயிலாக, 2 லட்சம் ரூபாய் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும், விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி வழங்கப்படும்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் தற்போதுள்ள, 125 நாள் வேலை வாய்ப்பு, 150 நாளாக உயர்த்தப்படும்.
குடும்ப தலைவியருக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் உரிமைத்தொகை, 1.05 கோடி குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர், 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
வட்டியில்லா கடன்
கால்நடை வைத்துஇருப்போரிடம் இருந்து சாணம் கிலோ 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும், அரசு கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும்.
இயற்கை பேரிடரின் போது ஏற்படும் இழப்புகளுக்கு குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.
மாநில அரசு வழங்கும் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீடு தொகை, 25 லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சிறு வணிகர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!