Load Image
Advertisement

மது கடைகளை மூடியதால் வருவாய் இழப்பா சட்டப்படி முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து மது கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிக்க வருவாய் நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு பா.ம.க. கவுரவ தலைவர் மணி பதில் அளிக்கவும் சட்டப்படி அரசு முடிவெடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ல் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடந்தது. அதில் பங்கேற்க வந்தவர்களுடன் மரக்காணம் பகுதியில் கலவரம் நடந்தது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் தீ வைக்கப்பட்டன.

பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக 2013 ஏப்ரல் 25 முதல் மே 19 வரை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் மது கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிக்க பா.ம.க. கவுரவத் தலைவர் மணிக்கு வருவாய் நிர்வாகம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மணி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 'நோட்டீசுக்கு மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும்; ரத்து செய்ய முடியாது' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மணி மேல்முறையீடு செய்தார்.

இம்மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

மணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ''பஸ் ஓடாதது மது கடைகள் மூடப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு கோருவது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்'' என்றார்.

இதையடுத்து மது கடைகளுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறுவது குறித்து அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும் என்றும் வழக்குகளில் விடுதலை ஆனதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் முதல் பெஞ்ச் தெரிவித்தது.

நோட்டீசுக்கு மனுதாரர் தரப்பில் 15 நாட்களில் பதில் அளிக்கவும் அதை சட்டப்படி பரிசீலித்து அரசு முடிவெடுக்கவும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement