சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா கிராமத்தில், 'சிப்காட்' தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது.
20 விவசாயிகள் கைது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 126 நாட்கள் தொடர்ந்து போராடிய, 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
அதேநேரத்தில், விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, 24 மாவட்டங்களில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், ஈசன் முருகசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., தமீமுன் அன்சாரி, திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, ஆயிரம் விளக்கு சமூகநல கூடத்தில் அடைத்து வைத்தனர்.
உத்தரவு
போலீசார் வழங்கிய மதிய உணவை தவிர்த்து, அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர்; பின், இரவு விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, திருவண்ணாமலையில் கைதான, 20 விவசாயிகள் ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
அதை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன், 20 பேருக்கும் ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கூறியதாவது:திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தை சுற்றிலும் நிலம் எடுப்பதில் காட்டும் அதீத ஆர்வம் ஏன் என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லாமே எடுத்தோம், கவிழ்த்தோம் என்றே நடக்கிறது. குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள அருள் ஆறுமுகம் ஒரு விவசாயி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். தகவல் தொழில் நுட்ப பட்டப்படிப்பு முடித்து, ஹெச்.சி.எல்., நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர். அவருக்கு சொந்த கிராமத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் விவசாய நிலம் உள்ளது. எட்டு வழி சாலை திட்டத்தில், அவரது நிலங்களும் சிக்கின. அதை மீட்க, வேலையை ராஜினாமா செய்து அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தொடர் போராட்டம் நடத்தினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மேல்மா கிராம மக்களுடன் இணைந்து போராடினார். மற்றவர்கள் மீது குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும், அருள் ஆறுமுகம் மீது மட்டும் விலக்கி கொள்ளப்படவில்லை.
இந்த இடத்தில் தான் அரசின் உள்நோக்கம் புரிகிறது. எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடையில்லை என்று கூறி விட்டது. துவக்கத்தில் அத்திட்டத்தை எதிர்த்த தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்ததும், அதை நிறைவேற்ற ஆசைப்படுகின்றனர். அருள் ஆறுமுகம், வெளியே இருந்தால், அதற்கு எதிராக போராடுவார். எனவே தான், அவர் மீது மட்டும் குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அருள் ஆறுமுகம் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:செய்யாறில், 'சிப்காட்' தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு, 11 கிராமங்களிலிருந்து விளைநிலங்களை கையகப்படுத்த, அரசு தீவிரம் காட்டுகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல், நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த, தமிழக அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது. அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, இன்று செய்யாறு நகரத்தை அடுத்த மேல்மா கூட்டுச் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!