தனியார் நிறுவனங்கள் வாயிலாக டிரைவர் கண்டக்டர் நியமனம் அபாயகரமானது
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 'மேன்பவர் ஏஜென்சி்' எனும் தனியார் நிறுவனம் வாயிலாக, டிரைவர், கண்டக்டர்களை நியமிப்பது தொடர்பாக, செப்.,30ல் 'டெண்டர்' கோரப்பட்டது.
தன்னிச்சையானது
இந்த மனு, நீதிபதி ஆர்.ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் வாயிலாக மட்டுமே நிரப்பப்படும் என்ற ஒப்பந்தத்தை மீறி, டெண்டர் கோரப்பட்ட அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது; சட்டவிரோதமானது.
இந்த விவகாரம் குறித்து, தொழிலாளர் நலத்துறை ஆய்வுக்கு எடுத்து, தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தி இருக்கும் நிலையில், மாநகர போக்குவரத்து கழகம், டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தன்னிச்சையானது' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரமண்லால், 'தொழிலாளர் நலத்துறை கமிஷனரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை. ஊழியர்கள் பலர் தொடர்ந்து பணிக்கு வராததால், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டிருக்கும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் வாயிலாக பணியாளர் நியமிக்கப்படும்போது, நிரந்தர ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தடுக்கப்படும்' என, தெரிவித்தார்.
நேரடி தேர்வு
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
போக்குவரத்து கழகங்களில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக டிரைவர், கண்டக்டர்களை நியமிப்பது ஊதிய முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும். இது, அபாயகரமான பரிசோதனை.
தனியார் நிறுவனங்கள் வாயிலாக, டிரைவர், கண்டக்டர் நியமனம் செய்யப்பட்டால், இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது. அவ்வாறு நியமிக்கப்படும் டிரைவர்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதிலும் சிக்கல் எழும்.
ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, டிரைவருடன் கூடிய கண்டக்டர் களை தேவைக்கு ஏற்ப, நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து, தனியார் நிறுவனங்கள் வாயிலாக ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தால், அது நிர்வாகத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப வல்லுனர்கள் காலிப் பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
தொழில் தகராறு சட்டத்தின் கீழ், சமரச பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ள நிலையில், 'அவுட்சோர்ஸ்' முறையில் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என, மனுதாரர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
அது தேவையற்றது. டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!