ADVERTISEMENT
முடிச்சூர், முடிச்சூரில், மழைநீர் கால்வாய் பணியின் போது இடிக்கப்பட்ட இடத்தில், புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கியும், ஆக்கிரமிப்பாளர்களின் இடையூறு காரணமாக, அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முடிச்சூர் ஊராட்சி, லட்சுமி நகரில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
தாம்பரத்தில் இருந்து படப்பை, காஞ்சிபுரம், மண்ணிவாக்கம், வண்டலுார் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கு நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்கின்றன.
மேற்கு - கிழக்கு - தெற்கு லட்சுமி நகர், நேதாஜி நகர், பொன்னியம்மன் நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள், இந்த நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். நாள்தோறும், 600 முதல் 700 பேர் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிறுத்தத்தில், பயணியர் நின்று பேருந்து ஏற வசதியாக, நிழற்குடை ஒன்று இருந்தது. தாம்பரம் - முடிச்சூர் சாலையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணியின் போது, நிழற்குடை சேதமடைந்ததால், அதை அகற்றினர்.
தற்போது, கால்வாய் பணி முடிந்துவிட்ட நிலையில், புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தாம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதிய நிழற்குடை அமைக்க, 7 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்வாய் பணி முடிந்ததும், நிழற்குடை இருந்த இடத்தை சாலையை ஒட்டியுள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
அத்துடன், புதிய நிழற்குடை அமைக்க இடையூறாக இருந்து வருகின்றனர். இதனால், மக்கள் மழையிலும், வெயிலிலும் சாலையிலேயே நின்று பேருந்து ஏறும் நிலை உள்ளது.
குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்களின் இடையூறுகளால், நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பிலேயே உள்ளது.
எனவே, இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்து நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!