ADVERTISEMENT
சென்னை, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேம்நாத், 24. இவர், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க செல்வதற்காக, சென்னையிலுள்ள அமெரிக்க துாதரகத்தில்,'விசா' கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
கடந்த 16ம் தேதி, விசாவிற்காக நேர்முகத் தேர்விற்கு வந்தபோது, அவர் சமர்ப்பித்த பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் போலி என கண்டறியப்பட்டது. இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபாபு, 35, என்பவர், ஹேம்நாத்திற்கு போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்தது தெரிந்தது.
இதையடுத்து, ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார், ஹரிபாபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கணினி, அச்சு இயந்திரங்கள், மடிக்கணினி, போலி ஆவணங்கள், 2 லட்சம் ரூபாய், 3 மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் குறித்து, போலீசார் கூறியதாவது:
ஹரிபாபு, தெலுங்கானாவில் பி.டெக்., படிப்பை முடித்துவிட்டு, மஹாராஷ்டிராவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின், அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், கடந்த இரு ஆண்டுகளாக அவரது சொந்த ஊரில், வெளிநாடு செல்பவர்களுக்கு போலியாக கல்வி சான்றிதழ்கள் தயார் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இதன் வாயிலாக, ஐ.டி., நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தை விட, மூன்று மடங்கிற்கும் அதிகமாக சம்பாதித்து வந்தது தெரிந்தது.
தற்போது, அவர் யார் யாருக்கெல்லாம் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!