ADVERTISEMENT
அயனாவரம், குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதரில், விஷ ஜந்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், நியூ ஆவடி சாலை, அயனாவரத்தில் சோலையம்மன் கோவில் தெரு உள்ளது.
நியூ ஆவடி சாலையோரத்தில், வில்லிவாக்கம் முதல் ஐ.சி.எப்., மற்றும் அயனாவரம் வழியாக, குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் ராட்சத குழாய் செல்கிறது.
இதனால், காலிமனையாக உள்ள இந்த குடிநீர் வாரிய இடத்தில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, போதிய பராமரிப்பு இல்லாததால், காலி இடம் முழுதும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நியூ ஆவடி சாலையோரம், அயனாவரம் பகுதியில் உள்ள குடிநீர் வாரிய இடம், பராமரிப்பின்றி உள்ளது. இதனால், வில்லிவாக்கம் முதல் அயனாவரம் வரை 3 கி.மீ., துாரம் காடுபோல் காட்சியளிக்கிறது.
குறிப்பாக, அயனாவரம் சோலையம்மன் தெரு பகுதியில், புதர் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதை சுற்றி, தனியார் பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. புதரை அகற்றாமல் இருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
அதேபோல், சக்கரவர்த்தி நகர், தந்தை பெரியார் நகர் மற்றும் காமராஜர் தெருக்களுக்கு செல்ல, நியூ ஆவடி சாலை வழியாக இணைப்பு பாலம் உள்ளது.
இங்கு குப்பை கழிவுகள் தேங்கி இருப்பதால், பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேடாக இருக்கிறது. இதன் காரணமாக, நோய் தொற்று அச்சம் ஏற்படுகிறது.
இந்த பகுதியில் மட்டுமல்ல, நியூ ஆவடி சாலையோரத்தில் உள்ள வாரியத்தின் இடம் முழுதும், இதே நிலை தான் நிலவுகிறது.
அதுமட்டுமின்றி, வாரியத்திற்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தும், பலர் அத்துமீறுகின்றனர். குறிப்பாக, இணைப்பு பாலம் அருகில் ஏராளமானோர் மாடுகளை வளர்க்கின்றனர்.
மாட்டின் உரிமையாளர்கள் அவர்களது வீட்டில் கட்டி வைக்காமல், இணைப்பு பாலத்தின் சாலையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை கட்டி வைக்கின்றனர்.
பல்வேறு பகுதிளில் மாடுகளை வளர்போர், மாட்டின் சாணத்தை அதிக அளவில், காலிமனையில் கொட்டி வைக்கின்றனர். மழைக் காலங்களில் சீர்கேடு நிலவுவதுடன், கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், அட்சியமாகவே இருக்கின்றனர். இங்கு சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, காலிமனையை துாய்மைப்படுத்தி, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!