ADVERTISEMENT
சென்னை,இரட்டை கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கு பின், முதியவரை சரமாரியாக வெட்டிக் கொன்றவர்களில் நால்வர் சரணடைந்தனர்.
சென்னை எருக்கஞ்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன், 60. இவர், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பட்டறையில் வெல்டராக பணி புரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, ஆட்டோவிற்காக மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே காத்திருந்தார்.
அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கும்பல், அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. உயிருக்கு போராடிய செழியன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவில் உயிரிழந்தார்.
செங்குன்றம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:
செழியன், முன் விரோதம் காரணமாக, கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பாபு ஆகியோரை, 2001ல் வெட்டிக் கொன்றார்.
இந்த வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறை தண்டனை அனுபவித்த அவர், நன்னடத்தை காரணமாக மூன்றாண்டுகளுக்கு முன், புழல் சிறையில் இருந்து விடுதலையானார். அதன் பின், தனியார் பட்டறையில் வேலை செய்து வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனான கொடுங்கையூரைச் சேர்ந்த சதீஷ்குமார், 20 ஆண்டுகள் காத்திருந்து, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து செழியனை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது.
இது தொடர்பாக, சதீஷ்குமார், 30, அப்பு, 28, விஷால், 24, மகேஷ், 26, ஆகியோர், நேற்று காலை செங்குன்றம் போலீசில் சரணடைந்தனர்.
மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
எல்லை பிரச்னை
செழியன் கொலை செய்யப்பட்டது அறிந்து, புழல், செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின், அந்த இடம் தங்கள் எல்லை இல்லை என நழுவினர்.அதன்பின், மாதவரம் போலீசார் விசாரணை துவக்கினர். அப்போது, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த செழியன் என்பது தெரிந்தது. இந்த நிலையில், தங்கள் எல்லை தான் என்பதை உறுதி செய்த செங்குன்றம் போலீசார், மீண்டும் விசாரணையை மேற்கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!