ADVERTISEMENT
சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை, போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த வழக்கில், ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் லைசா ஜோஸ்பின், 88. அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், கூறியிருப்பதாவது:
என் தந்தைக்கு சொந்தமாக, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்துார் வட்டம் கொன்னுார் கிராமத்தில், 3,544 சதுரடி காலி வீட்டு மனை உள்ளது. தந்தை, 1979ல் உயிரிழந்ததை அடுத்து அந்த இடத்தை பராமரித்து வந்தேன். இந்நிலையில், என் தந்தை பெயரில் இருந்த சொத்தை, என்னுடைய பெயருக்கு கடந்த ஆக., 30ம் தேதி பதிவு செய்தேன்.
பதிவு செய்த இரண்டே மாதத்தில், போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து என்னுடைய சொத்தை அபகரித்துள்ளனர். இதற்கு, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் உதவி உள்ளார். போலி ஆவணங்கள் வாயிலாக சொத்தை அபகரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்தனர்.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு, 57, தி.நகரைச் சேர்ந்த குருசாமி, 63, முருகப்பன், 61, முத்து, 55, நாகராஜ், 52 ஆகியோர், நில அபகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!