தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலையின், இரண்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
அரசின் உரிமைகள்
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அதனால், அனைத்து பல்கலைகளிலும் வேந்தராக, முதல்வரே இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதற்காக சட்ட முன்வடிவுகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகிற வகையில், நீதிபதிகள் கருத்துக்களை சொல்லி உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவாக, ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால் தான், எல்லாருக்கும் கல்வி, எல்லாருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை, மாநிலங்கள் எட்ட முடியும்.
நான் தமிழகத்திற்காக மட்டும் இப்படி சொல்ல வில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். கல்வி தான் ஒருவருடைய நியாயமான சொத்து.
அந்தக் கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பது தான், நம் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலை என்ற பெருமை, இப்பல்கலைக்கு உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கு தான் மாநில முதல்வரே வேந்தராக இருக்கிற உரிமை இருக்கிறது.
இப்படி முதல்வரே வேந்தராக இருந்தால் தான், பல்கலைகள் சிறப்பாக வளர முடியும்.
மனமுவந்து பாராட்டு
மற்றவர்கள் கையில் இருந்தால், அதன் நோக்கமே சிதைந்து போய் விடும் என்று நினைத்து தான், 2013ம் ஆண்டே இந்தப் பல்கலையின் வேந்தர் முதல்வர் தான் என்று, அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்திருந்தார்.
இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து, நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது, தமிழைக் காப்பாற்றுவது; தமிழினத்தை காப்பாற்றுவது.
அந்த வகையில், தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும், எல்லாரும் அதிக முக்கியத்துவம் தர
வேண்டும். அதற்கு இசைப்பல்கலை ஊக்கம் அளிக்க வேண்டும்.பழந்தமிழ் இசை நுால்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்; புதிய இசை நுால்கள் எழுதப்பட வேண்டும். இதில் பல்கலை கவனம் செலுத்த வேண்டும்.
இப்பல்கலைக்கான அரசு மானியம், 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு, அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும். பல்கலையில் ஆராய்ச்சி மையம், நுாலகம், கற்றல் மேலாண்மை அமைப்பு முறை அமைக்க, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
டாக்டர் பட்டம்
இசைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில், 3,229 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பிரபல திரைப்பட பாடகி சுசீலாவுக்கும், இசைத் துறைக்கு அரிய தொண்டாற்றியுள்ள அறிஞர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கும், கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், துணை வேந்தர் சவுமியா, பதிவாளர் சிவசவுந்தரவள்ளி, சுற்றுலா, பண்பாடு
மற்றும் அறநிலையத் துறை செயலர் மணிவாசன் பங்கேற்றனர்.
கலைகளில் சமத்துவம் டி.எம்.கிருஷ்ணா விருப்பம்
பட்டமளிப்பு விழாவில், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது:
கலைகள், கலாசாரம் சமுதாயத்திற்கு முக்கியமானவை. சமுதாயம் முற்போக்காக இருக்க, கலை வளர்ச்சி முக்கியம். நீங்கள் கற்றுக்கொண்ட கலை, வாழ்க்கை முழுதும் உடனிருக்கும்.
மாற்றங்களை ஏற்படுத்துவதில், கலைக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு கலையும் ஒரு வட்டத்திற்குள் உள்ளது. யார் வேண்டுமானாலும், எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம் என்பது, இப்பல்கலையால் தான் முடியும்.
கலைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். கர்நாடக இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் இடையே வேற்றுமை உள்ளது; அதை மாற்ற வேண்டும். கூத்து, பறையாட்டம் போன்ற கலை வடிவங்களுக்கு, பட்டப்படிப்பை பல்கலையில் துவக்க வேண்டும்.பரதநாட்டியம் முக்கியம் என்றால், கூத்தும் முக்கியம். கர்நாடக இசை முக்கியம் என்றால் நாட்டுப்புற பாடலும் முக்கியம். நாட்டுப்புறம் இல்லை என்றால் நாம் இல்லை.
நவீன கலைகள் அதிகம் வருகின்றன. 'டிஜிட்டல் ஆர்ட், டிசைன்' போன்ற நவீனக் கலைகளை, பல்கலைக்குள் முழு படிப்பாக கொண்டு வரப்பட வேண்டும். மாவட்டங்களில் செயல்படும், 17 இசை பள்ளிகள், பல்கலையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பாடகி சுசிலாவின் ரசிகர் எனக்கூறிய முதல்வர், அவர் பாடிய பாடலின் சில வரிகளை பாடிக் காண்பித்து, அனைவரையும் கவர்ந்தார். அவர் பேசியதாவது:இசைப் பல்கலை சார்பில், பாடகி சுசிலா, சுந்தரம் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்துகிறோம். பாடகி சுசிலா குரலில், மயங்காதவர்களே இருக்க முடியாது; அதில் நானும் ஒருவன். வெளியூருக்கு இரவில் பயணம் செய்யும் போது, காரில் அவரது பாட்டை கேட்டுக் கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, 'நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை...' என்ற பாடல் எனக்கூறி, அப்பாடலின் முதல் சில வரிகளை பாடினார். இப்பாடல், தெய்வத்தின் தெய்வம் படத்தில் இடம் பெற்றுள்ளது.
TMS அளவுக்கு வந்திருக்க வேண்டியவர் எங்கள் தலைவர். பாவம் இசைத்துறை பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விட்டார்.