சாலையெங்கும் குப்பை
பாலக்காடு ரோடு, குனியமுத்துாரில் சாலையோரம் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது. பல நாட்களாக குவிந்துள்ள கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரமுள்ள கழிவுகளை அகற்றச் சொல்லியும் நடவடிக்கையில்லை.
- மோகன், குனியமுத்துார்.
அம்மாசை வீதிக்கு ஒளி எப்போது?
வெள்ளக்கிணறு, அம்மாசைக் கவுண்டர் வீதியிலுள்ள, கம்பம் எண், 'எஸ்பி - 13, பி -2'ல் கடந்த இரண்டு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில், பணி முடிந்து வரும் பெண்கள், முதியவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
குப்பை கொட்டுவதை தடுக்கணும்
ஒண்டிப்புதுார், திருச்சி சாலையில், பெருமளவு குப்பை குவிந்துள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இங்கு, திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை வேண்டும்.
- மகிழன், ஒண்டிப்புதுார்.
மூடப்படாத குழிகள்
கோவை மாநகராட்சி, 82வது டிவிசன், ரத்தினம் வீதி, கால்நடை மருத்துவமனை அருகே குடிநீர் குழாய் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடவில்லை. சாலையெங்கும் கற்கள், குழிகளாக காணப்படுகிறது. மழை பெய்தால் சாலை முழுவதும் சேறாக மாறிவிடுகிறது.
- சங்கர், ரத்தினம் வீதி.
தொட்டி வைத்தால் தொல்லையில்லை
காந்திபுரம், ஏழாவது வீதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் பின்புறம், மலை போல குப்பை குவிந்துள்ளது. இப்பகுதியில், இரண்டு தொட்டிகளும் உடைந்துள்ளது. பல வாரங்களாக குப்பையும் அகற்றவில்லை. புதிய தொட்டிகள் வைத்து, சீரான இடைவெளியில் குப்பையை அகற்ற வேண்டும்.
- ராஜேஸ் குமார், காந்திபுரம்.
பள்ளங்களால் தொடரும் விபத்து
வடவள்ளி, பெரியார் ரோடு, மூன்றாவது வீதியில், சாலையெங்கும் பெரிய பள்ளங்களாக காணப்படுகிறது. குறிப்பாக, திருப்பத்தில் இருக்கும் பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பலமுறை புகார் செய்தும் சாலை சீரமைக்கவில்லை. உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.
- வெங்கடரமணி, வடவள்ளி.
கோவில் முன் குவியும் குப்பை
செல்வபுரம், 76வது வார்டு, இந்திரா நகர் விரிவாக்கத்தில், புகாரை தொடர்ந்து பெருமளவு குப்பை அகற்றப்பட்டது. ஆனால், முழுமையாக குப்பை அகற்றவில்லை. மருத்துவமனை மற்றும் கோவிலுக்கு அருகேயுள்ள குப்பையை முழுமையாக அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.
- மகேஷ், செல்வபுரம்.
சேதமடைந்த கம்பம்
கே.கே,புதுார், ஆறாவது வீதி, பாபா காலனியில், மின்கம்பம் மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடியில் சிமென்ட் பெயர்ந்து, வெறும் கம்பிகளே காணப்படுகிறது. கம்பம் முழுவதும் பெரிய, பெரிய விரிசல்கள் காணப்படுகிறது. மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
- லெனின், கே.கே.புதுார்.
புதர்மண்டிய கால்வாய்
பீளமேடு, 24வது வார்டு, ஜெய் நகர் மற்றும் செங்காளியப்பா நகர் இணைப்பு பாலத்தின் அடியிலும், வாய்க்காலில் புதர் மண்டி, குப்பை அடைத்து நிற்கிறது. மழை சமயங்களில், தண்ணீர் போக வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- சசீதரன், ஜெய்நகர்.
தார் சாலை பணிகள் நிறுத்தம்
ஒண்டிப்புதுார். எம்.ஆர்.ஆர்., லே-அவுட், இரண்டாவது வீதி, நஞ்சப்பா செட்டியார் கிழக்கு வீதி, ஆறுமுகக் கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் கடந்த 10ம் தேதி தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதில், ஒரு புறம் சாலை போட்ட பின்பு, பணிகள் நிறுத்தப்பட்டது. பத்து நாட்களுக்கு மேலாகியும் பணிகள் துவங்கப்படவில்லை.
- சங்கீதா, ஒண்டிப்புதுார்.
டெங்கு நோய் பரவும் அபாயம்
மாநகராட்சி, 82வது டிவிசன், வி.எச்.,ரோடு, அய்யன்கவுடா வீதி, ஸ்ரீ சக்தி முனியப்பன் கருப்பராயன் கோவில் அருகில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. கழிவுநீர் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
- சதாசிவம், அய்யன்கவுடா வீதி.
நடைபாதையில் ஆக்கிரமிப்பு
காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் செயல்படும் காபி கடை கழிவுகளை நடைபாதையில் கொட்டியுள்ளனர். மேலும், கடைகளுக்கான விளம்பர போர்டுகளையும் நடைபாதையில் வைத்துள்ளனர். நடந்து செல்வோர் பெரும் சிரமதிற்குள்ளாகின்றனர்.
- ரமணி, ராம்நகர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!