வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு நவீன இயந்திரம்: ரூ.54 கோடி மதிப்பீட்டில் வாங்க அரசுக்கு கருத்துரு
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும் குப்பை, மக்காதது, 'இ-வேஸ்ட்' என, தினமும், 1,200 டன் வரை குப்பை சேகரமாகிறது. இக்குப்பையானது வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர்.
பிரச்னை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்றதை அடுத்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த விசாரணையில்,'வெள்ளலுார் குப்பை கிடங்கில் பழைய குப்பையை அழிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இதில் மாநகராட்சியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக இல்லை' என, அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குப்பை கிடங்கில் ஆய்வு செய்து குப்பையை அப்புறப்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. வரும், 30ம் தேதி விசாரணை நடைபெறும் நிலையில், வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் குப்பை கிடங்கில் ஆய்வு செய்தனர்.
ரூ.54 கோடியில் கருத்துரு
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
பசுமை தீர்ப்பாயத்திடம் வெள்ளலுார் கிடங்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நானே கேட்டறிந்தேன். பழைய குப்பை நிலை, எத்தனை நாட்களில் அகற்றப்படும் என்பன உள்ளிட்ட தகவல்களை கேட்டனர்.
மேலும், சென்னை பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற நவீன இயந்திரங்கள் வெள்ளலுாருக்கு கொண்டுவருமாறு பசுமை தீர்ப்பாயம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, குப்பை மேலாண்மைக்கென்று ரூ.54 கோடி செலவில் நவீன இயந்திரங்கள் வாங்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
இந்த இயந்திர தயாரிப்பு நிறுவனத்தினரிடம் அதன் திறன், எத்தனை நாட்களில் பணிகளை முடிக்க முடியும் என்பன உள்ளிட்ட விபரங்கள் கேட்டறிந்துள்ளேன். நவீன இயந்திரங்கள் வந்தவுடன் குப்பை அழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!