கோவை மாநகராட்சியில், 2,129 நிரந்தரம் மற்றும் 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர்; தவிர, 795 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். தற்போது, திடக்கழிவு மேலாண்மை பணிகளை 'அவுட் சோர்சிங்' முறையில் தனியார் மேற்கொண்டுவருகிறது.
கவுன்சிலர்கள் குரல்
அதன்படி, தினமும், 1,250 டன் குப்பையை மேலாண்மை செய்ய ஆண்டுக்கு, 170 கோடியே, 48 லட்சத்து, 23 ஆயிரத்து, 750 ரூபாய் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இச்சூழலில், குப்பை மேலாண்மை மிகவும் தொய்வாக இருப்பதாக கவுன்சிலர்கள் குரல் எழுப்பிவருகின்றனர்.
நடைமுறையில் மாற்றம்
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
ரோட்டில் குப்பை கொட்டுவதாலும், தேங்கு வதாலும் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.
இதற்கு தீர்வு காண, குப்பை அள்ளும் வாகனம் எத்தனை மணிக்கு, எங்கு செல்கிறது, எத்தனை வீடுகளில் சேகரிக்கிறது என்பன குறித்து அறிய 'ரூட் சார்ட்' தயாரிக்கப்பட்டு வருகிறது.
குப்பை தேக்கம் ஏற்படும் பட்சத்தில் உரிய காரணங்களை கண்டறிந்து இதன் வாயிலாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வரைபடத்தின் வாயிலாக குறைகள் கண்டறியப்பட்டு தீர்வு காணமுடியும்.
வாகனங்கள் உரிய நேரத்துக்கு சென்றதா, ஏன் அங்கு குப்பை எடுக்கவில்லை, கூடுதல் வாகனங்கள் தேவையா என்பன குறித்தும் அறியமுடியும்.
நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே குப்பை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
குப்பை மேலாண்மை விஷயத்தில் சரியாக தரம் பிரித்து வழங்காதது போன்ற அலட்சியமும் மக்களிடம் நிலவுகிறது. இதையடுத்து, தரம் பிரித்து வழங்காதது, ரோடுகளில் நினைத்த இடங்களில் கொட்டுவது போன்றவற்றுக்கு வீடுகளுக்கு ரூ.50, வணிக நிறுவனங்களுக்கு ரூ.100 என, அபராதம் விதிப்பதற்கு மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெறவும் மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.
குப்பை வண்டி, டாஸ்மாக் சரக்கு விநியோகம் மற்றும் ரேசன் பொருட்கள் வண்டி இவை அனைத்தும் ஆளும், எதிர் கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது....