சென்னையின் ஒரு மாத குடிநீருக்கு, 1 டி.எம்.சி., தேவைப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் வாரியம் நாள்தோறும், 100 கோடி லிட்டர் குடிநீரை வினியோகம் செய்து வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவும், பல்வேறு பகுதிகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், சாலையோரம் ராட்சத குழாய் அமைத்து குடிநீர் எடுத்து வரப்பட்டு, தென்சென்னை பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்ட ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 13.2 டி.எம்.சி.,யாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தான், திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
ஆந்திராவின் பல இடங்களில் இருந்தும், கண்டலேறு அணையில் இருந்தும் வரும் கிருஷ்ணா ஆற்றின் நீரும், பூண்டி ஏரிக்கு கிடைக்கிறது.
கடலுார் மாவட்டம் வீராணம் ஏரிக்கு, வடகிழக்கு பருவமழை மட்டுமின்றி, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கிடைக்கும் காவிரி நீரும் கைகொடுத்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்வரத்து அதிகரித்து, கையிருப்பும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆறு, ஏரிகளிலும் சேர்த்து 9.91 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
வினாடிக்கு 861 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் இருந்து, சென்னையின் குடிநீர் தேவைக்கு, வினாடிக்கு 502 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு இதே நாளில், ஆறு ஏரிகளிலும் சேர்த்து, 8.57 டி.எம்.சி., நீர் மட்டுமே இருந்தது. தற்போது, அதைவிட 1.34 டி.எம்.சி., நீர் கூடுதலாக உள்ளது.
தற்போது ஆறு, ஏரிகளிலும் உள்ள நீரை வைத்து, குறைந்தபட்சம் எட்டு மாத குடிநீர் தேவையை எளிதாக சமாளித்து விட முடியும்.
பருவமழை தொடரும்பட்சத்தில், இம்மாத இறுதிக்குள் பல ஏரிகள் நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால், அடுத்தாண்டு கோடைக் கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஆனாலும், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்தாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கையிருப்பு உயர்ந்து வருவது, குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும், திருவள்ளூர் மாவட்டத்தின் பிரதான ஏரிகள் உட்பட இதர ஏரி மற்றும் குளங்களும் பருவமழையால் நிரம்பி வருகின்றன.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணைக்கட்டு மற்றும் பிச்சாட்டூர் அணைக்கட்டு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, நீர்வளத்துறை வாயிலாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாவட்டத்தில் 28 ஏரிகள், செங்கல்பட்டில் 564, காஞ்சிபுரத்தில் 381, திருவள்ளூரில் 578 ஏரிகள் உள்ளன. பாலாறு, பெண்ணையாறு, கொசஸ்தலையாறு, ஆரணியாறு, அடையாறு, கூவம் உள்ளிட்டவை இவற்றிற்கு நீராதாரமாக உள்ளன. வடகிழக்கு பருவமழையால், சென்னையில் எட்டு ஏரிகள் நிரம்பிய நிலையில், 11 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 91 ஏரிகள் நிரம்பிய நிலையில், 134 ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 45 ஏரிகள் நிரம்பிய நிலையில், 29 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், 42 ஏரிகள் நிரம்பிய நிலையில், 44 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன.
இந்த ஏரிகள், நீர்வளத்துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிகளின் கரைகள் உடைக்கப்படுவதை தடுக்க, நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தாம்பரம் புறநகரில், படப்பை பாசனப் பிரிவு எல்லையில், 89 ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையில், இந்த ஏரிகள் படிப்படியாக நிரம்பி வருகின்றன.இதுவரை, 45 ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. இதில் மணிமங்கலம், சோமங்கலம், படப்பை, ஒரத்துார், வடக்குப்பட்டு, ஆதனுார் உள்ளிட்ட ஏரிகள் அடங்கும்.
அதாவது, குன்றத்துார் தாலுகாவில் 39 ஏரிகளில் 25 ஏரிகள்; தாம்பரம் தாலுகாவில், 30 ஏரிகளில் 12 ஏரிகள்; பல்லாவரம் தாலுகாவில், 5 ஏரிகளில் 3 ஏரிகள்; சென்னை மாநகராட்சி எல்லையில், 15 ஏரிகளில் 5 ஏரிகள் நிரம்பியுள்ளன.தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், எஞ்சியுள்ள ஏரிகளும் நிரம்பும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரி மொத்த கொள்ளளவு கையிருப்பு (டி.எம்.சி.,)
புழல் 3.30 2.72
பூண்டி 3.23 1.86
சோழவரம் 1.08 0.67
செம்பரம்பாக்கம் 3.64 3.11'
தேர்வாய் கண்டிகை 0.50 0.43
வீராணம் 1.46 1.10
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!