புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இதையொட்டியுள்ள பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது.
நடவடிக்கை
தலைநகர் புதுடில்லியில் காற்று மாசு பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளது. காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
காற்று மாசு பிரச்னையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன.
இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா அமர்வு விசாரித்து வருகிறது.
பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதே, புதுடில்லியில் மாசு பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
புதுடில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தாண்டு நவ., மாதத்தில் தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டியது புதுடில்லி மற்றும் பஞ்சாப் அரசுகளின் கடமையாகும். எங்களின் பொறுமையை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம்.
இதில் அரசியலை பார்க்காமல், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
பஞ்சாபில், பெரும் விவசாயிகள், பயிர் கழிவுகளை இயந்திரங்கள் வாயிலாக, வைக்கோல் பந்துகளாக சுற்றி அதை விற்று வருகின்றனர். விவசாயிகளால் செய்ய முடியும்போது, அரசால் செய்ய முடியாதா? விவசாயிகளை வில்லனாக்கி பார்க்காமல், பிரச்னைக்கு தீர்வு என்ன என பார்க்க வேண்டும்.
சிறு விவசாயிகளுக்கு இயந்திரங்களை இலவசமாக கொடுத்தாலும், அதை இயக்குவதற்கான செலவுக்கு வசதி இல்லாத நிலை இருக்கும்.
இதுபோன்ற விவசாயிகளுக்கு உரிய மானியம் அளித்து, பயிர் கழிவுகளை, வைக்கோல் பந்துகளாக மாற்றி, அதை அரசே வாங்கி மாற்று பயனுள்ளதாக ஏன் மாற்றக் கூடாது?
தகுந்த முடிவு
பயிர் கழிவுகளை எரிப்பவர்களை மாநில அரசு ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. எரிப்பதை அவர்கள் நிறுத்தாவிட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டமைப்பில் இருந்து அவர்களை ஏன் நீக்கக் கூடாது.
இது ஆலோசனைதான், இவை குறித்து விவாதித்து, தகுந்த முடிவுகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.
போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையும், காற்று மாசுவுக்கு ஒரு காரணமாகும். ஆனால், புதுடில்லி - மீரட் இடையே மண்டல விரைவு போக்குவரத்து முறையை துவக்குவதற்கு, 415 கோடி ரூபாயை தர முடியவில்லை என, புதுடில்லி அரசு கூறுகிறது.
மாநில அரசு வெளியிடும் விளம்பரங்களை நிறுத்தி, இந்த திட்டத்துக்கு ஏன் நிதி ஒதுக்கக் கூடாது?
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வாசகர் கருத்து (6)
எம்.எஸ்.சுவாமிநாதன் 300 அடிக்கு போர்வெல் போட்டு ஆரம்பிச்சு வெச்சாரு. இன்னிக்கி பசுமைப் புரட்சி வீரர்.
பஞ்சாப் விவசாயிகளை முட்டாள்கள்நு சொல்ல தைரியம் உண்டா?
ஒன்றிய அரசுக்கு ஒரு பொறுப்பும்.கிடையாதா? ஜி.எஸ்.டி வசூல் பண்றதோட சரி...
இதை வைத்து இங்கே எவனும் கூவ மாட்டான்.
உச்ச மன்ற நீதிபதிகளே உச்சமன்றத்தில் அமர்ந்து இனி வழக்குகளை விசாரித்து நீதி வழங்கமுடியாமல் மூச்சு திணறுவார்கள்போலிருக்கிறது தலைநகர் தில்லையின் நிலைமை இதற்கு உடனே தில்லி அரசு நடவடிக்கைகள் எடுக்காவிடில் அரசை கலைப்பதைத்தவிர வேறு ஒரு வழியும் இல்லை இவர்களே ஆளும் அண்டைமாநிலத்திலும் அதே கதிதான்
விவசாயம் ஒரு சென்டிமெண்ட் மேட்டர். அடுத்தடுத்து ( இரண்டாம் போக) நெல் உடனே பயிர் செய்வதற்காக வைகோலை வயலிலேயே எரிப்பது மட்டுமல்ல. 1000 அடி போர்வேல் போட்டு நிலத்தடி நீரை அதலபாதாளத்தில்😮💨 தள்ளி விட்டனர். அந்நீரிலும் மினரல் அளவு அதிகமாக இருப்பதால் தானியத்தின் தரமும் குறைகிறது. நிலவளமும் குறைகிறது. வாக்கு வங்கிக்காக அரசுகள் எவ்விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்படிப்பட்ட பொறுப்பற்ற விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி, புள்ளி ராஜா கூட்டணியின்😬 ஆதரவும் உண்டு. கொடுமை.