உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு, உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் கமிஷன் மண்டிகள் வாயிலாக, ஏல முறையில், கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
உடுமலை பகுதிகளில், ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் செடி முறையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், மழை பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த, கொடி முறையிலும், தக்காளி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செடி முறையில், மண்ணில் தக்காளி காய்கள் பிடிப்பதால், அடிபடுதல், அழுகல் மற்றும் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுவதோடு, பல கி.மீ., துாரம் வாகனங்களில் ஏற்றிச்சென்று, விற்பனை செய்வதால், சேதம் அதிகரித்து வருகிறது.
ஆனால், கொடி முறையில், பழங்கள் அதிக திரட்சியுடன் கிடைப்பதோடு, தரமாகவும், அதிக துாரம் கொண்டு சென்றாலும், சேதம் குறைவாக இருக்கிறது. தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு உள்ளதால், நோய் தாக்குதலும் குறைகிறது. இதனால், சந்தையில், தற்போது செடியில் விளைவித்த தக்காளியை விட, கொடியில் விளைவித்த தக்காளிக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது.
கொடிமுறையில் சாகுபடி
விவசாயிகள் கூறியதாவது:
வழக்கமான செடி முறை தக்காளி சாகுபடி செய்ய, ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நடவு செய்த, 60 நாளில் காய்ப்புக்கு வரும் நிலையில், 40 நாட்கள் வரை பறிக்கலாம்; சராசரியாக, ஏக்கருக்கு,15 முதல், 25 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது, தரத்திற்கு ஏற்ப, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 100 முதல், 300 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
கொடி முறையில், செடி நடவு செய்து, வளரும் போது, குச்சி ஊன்றி, கயிறு கட்டி பராமரிக்க வேண்டும். இம்முறையில், ஒரு லட்சம் ரூபாய் வரை சாகுபடி செலவாகிறது.
நடவு செய்த, 60வது நாளில் காய்க்க துவங்கும்; 2 முதல், 4 மாதங்கள் வரை முறையாக பராமரித்தால், அறுவடை செய்ய முடியும். இதன் வாயிலாக, ஏக்கருக்கு, 25 முதல், 35 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தக்காளி தரம் காரணமாக, வியாபாரிகள் ஆர்வமாக கொள்முதல் செய்வதால், 300 முதல், 500 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.
இதனால், மகசூல், விலை அதிகரிக்கிறது. இம்முறை மழை பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளிலும் அதிகளவு விவசாயிகள் கொடி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
கொடி முறையில் சாகுபடி செலவு அபரிமிதமாக உள்ள நிலையில், விலை குறைந்தால் கடும் பாதிப்பு ஏற்படும். அதனால், ஒரு சில விவசாயிகள் பழைய முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த, தோட்டக்கலைத்துறை உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதோடு, மானிய திட்டங்களையும், சராசரி விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!