மூடப்படாத கால்வாய்
வால்பாறை நகரில், நெடுஞ்சாலை துறை ரோட்டில் உள்ள கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால், ரோட்டோரம் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கவனித்து, சீரமைக்க வேண்டும்.
-- -சங்கர் வால்பாறை.
குடிநீர் பற்றாக்குறை
வால்பாறை நகரில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலர் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேன்கூடு அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இரண்டு பெரிய தேன் கூடு உள்ளது. இப்பகுதியில் சமூக விரோதிகள் செயலால் தேன் கூடு கலைக்கப்பட்டால் அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கடுமையாக பாதிப்படைய கூடும். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் இந்த தேன் கூட்டை அகற்ற வேண்டும்.
-- -ரஞ்சித், கிணத்துக்கடவு.
ரோட்டில் 'பார்க்கிங்'
பொள்ளாச்சி, அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டின் ஓரத்தில், அதிக அளவு கார்கள் மற்றும் இதர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், அவ்வழியில் பயணிக்கும் பிற வாகன ஓட்டுனர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய, 'பார்க்கிங்' செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -ரகு, பொள்ளாச்சி.
தடுப்பு வையுங்க!
கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் தடுப்புகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு விபத்தை தடுக்க, தடுப்பு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -கோபால், கோவில்பாளையம்.
ரோடு படுமோசம்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், சி.டி.சி., மேடு முதல், ஆச்சிபட்டி கான்கிரீட் ரோடு துவங்கும் இடம் வரையிலும், ரோடு உருக்குலைந்து பல இடங்களில் பள்ளம், விரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பல இடங்களில், 'பேட்ச் ஒர்க்' செய்துள்ளனர். இப்பகுதியில் ரோட்டை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்.
-- சுப்ரமணியம், பொள்ளாச்சி.
குடிநீர் வருவதில்லை
கணக்கம்பாளையம் ஊராட்சி, குப்பன்ன லே - அவுட்டில், 12 நாட்களாக குடிநீர் வருவதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டியதுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறுமுகம், குப்பன்ன லே - அவுட்
'லொள்' தொல்லை
உடுமலை நகராட்சி, ஸ்ரீராம் நகரில் கடந்த, 10 நாட்களாக நாய்த்தொல்லை அதிகரித்துள்ளது. ரோட்டில் செல்வோரை நாய்கள் விரட்டி கடிக்கிறது. இதனால், மக்கள் நடமாட முடிவதில்லை. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கலாவதி, ஸ்ரீராம்நகர்
பயன்பாட்டுக்கு வரணும்!
உடுமலை - திருப்பூர் ரோடு சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுமையாக செயல்பட துவங்கவில்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவகுமார், உடுமலை.
வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
உடுமலை, தளிரோடு சுரங்கபாலத்தில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பாதையில் வெளிச்சமும் இல்லாததால், மாலை நேரங்களில் சுரங்கப்பாதையின் வழியில் செல்லும், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். சுரங்கப்பாதை ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- சாரதா, உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, நேரு வீதியில் திறந்த வெளியில் குப்பைக்கழிவுகளை கொட்டுகின்றனர். கழிவுகள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாமல் உள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. தெருநாய்கள் கழிவுகளை ரோட்டில் பரப்புவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- பாலகிருஷ்ணன், உடுமலை.
கழிவுகள் அகற்றவில்லை
உடுமலை, பசுபதி வீதி இடைப்பட்ட தெருவில், சாக்கடையில் உள்ள குப்பை, கழிவுகளை அள்ளி ரோட்டில் போட்டு சென்று விட்டனர். பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நகராட்சியினர் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
- சீனிவாசன், பசுபதி வீதி.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!