பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்'இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.
இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா'வுக்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் சார்பில், வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150 பள்ளிகளில் நடக்கிறது. இப்போட்டிகளை, 'கோலோ' நிறுவனம் மற்றும் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்குகிறது.
பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வினாடி - வினா போட்டி நடந்தது. முதல் சுற்றில், 41 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'ஏ' அணியை சேர்ந்த மாணவி பூதர்ஷனா, ரேஷ்மா பேகம் ஆகியோர் வென்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் ஷகிலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
தேர்வு செய்வது எப்படி?
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடத்தப்படும். இதில், இருந்து எட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜன., மாதம் இறுதிப்போட்டி நடத்தப்படும்.
இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெறும் இரு மாணவர்களுக்கு, அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றி பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டாமிடம் பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கு, 'லேப்டாப்'; மூன்றாமிடம் பிடிக்கும் இருவருக்கு, 'டேப்லெட்' மற்றும் நான்காம் பரிசாக, 10 மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் வாட்ச்' வழங்கப்படும். வெற்றி பெற்ற, 'டாப்' 25 அணிகளை சேர்ந்த, 50 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டித்தேர்வுக்கு உதவும்
பள்ளி தலைமையாசிரியர் கூறியதாவது:
'பட்டம்' நாளிதழ் படிப்பதற்கு எளிமையாகவும், புதுமையாகவும் உள்ளது. நாளிதழில் வெளிவரும் புதிர்களும், பொதுஅறிவு துணுக்குகளும் மிகவும் பயனாக உள்ளது. முதல் பக்கத்தில் வரும் சித்திரம், மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது.
அதிகப்படியான சொற்கள் கையாளப்பட்டுள்ளதால், மாணவர் அதிகமான சொற்களை தெரிந்து கொள்ளலாம். அறிவுத்திறன் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கும் 'பட்டம்' இதழ் பயனாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!