Load Image
Advertisement

மாதம் ரூ.5 லட்சம் மாமூல் வாங்கும் மருந்து அதிகாரி!

 A drug officer who buys Rs. 5 lakh a month!    மாதம் ரூ.5 லட்சம் மாமூல் வாங்கும் மருந்து அதிகாரி!
ADVERTISEMENT
''காதும் காதும் வச்ச மாதிரி, வருமான வரி ரெய்டு நடந்திருக்குது பா...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எங்க வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துல சில நாட்களுக்கு முன்னாடி, பிரபல நகைக்கடையில புகுந்த வருமானவரி அதிகாரிகள், ஷட்டரை சாத்திட்டு, 10 மணி நேரம் சோதனை நடத்துனாங்க... அதோட, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் தோட்டம், தி.மு.க., கவுன்சிலருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்துலயும் சோதனை நடந்துச்சு பா...

''ஆனா, இந்த சோதனை பத்தி அதிகாரிகள் தரப்பும், தி.மு.க., தரப்பும் மூச்சு கூட விடலை... ஏதாவது பறிமுதல் செஞ்சாங்களா, இல்லையான்னும் தெரியலை பா...'' என்றார், அன்வர்பாய்.

''ராஜேந்திரன், சீனிவாசன் வரா... பில்டர் காபி போடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''விஜயை பாராட்டி தள்ளிட்டார் ஓய்...'' என்றார்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சமீபத்துல ஒரு, 'யு டியூப்' சேனலுக்கு பேட்டி தந்திருக்கார்... பல கேள்விகளுக்கு பதில் தந்தவரிடம், நடிகர் விஜயின் அரசியல் திட்டம் பத்தியும் கேட்டிருக்கா ஓய்...

''அதுக்கு வைகோ, 'அவர் நல்ல நடிகர்... ரொம்ப மரியாதையானவர்... ஏர்போர்ட்ல என்னை பார்த்தா, எழுந்து வந்து நலம் விசாரிப்பாரு... அவர்ட்ட இருக்கற பண்பாடு, மற்ற நடிகர்களிடம் இல்லை...

''தாராளமா அவர் அரசியலுக்கு வரலாம்... அவரது திட்டங்களை மக்கள் முன் வைக்கட்டும்... அதுக்கு அப்புறம், அவருக்கு நான் ஆலோசனை தர்றது பத்தி முடிவெடுக்கலாம்'னு சொல்லியிருக்கார் ஓய்...

''இதை பார்த்த ஆளுங்கட்சி ஜூனியர் அமைச்சர் ஒருத்தர், 'அப்செட்' ஆகிட்டாராம்... 'நம்மகிட்ட ரெண்டு சீட் வாங்கறதுக்காக, விஜய்க்கு இப்படி பில்டப் தரணுமா'ன்னு நெருக்கமானவாளிடம் சொல்லி ஆதங்கப்பட்டிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மாசம் மாமூல் மட்டும், 5 லட்சம் ரூபாய் வருதாமுல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டத்துல, 30,000 மெடிக்கல் ஸ்டோர், 600 ரத்த வங்கிகள் இருக்கு... இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரி, மெடிக்கல் ஸ்டோர்ல மாசம், 1,000, ரத்த வங்கியிடம் 2,000 ரூபாய் வரை மாமூல் வசூலிக்காரு வே...

''புதுசா யாராவது மெடிக்கல் ஸ்டோர் திறந்தா, இவருக்கு, 5,000 ரூபாய் மொய் வைக்கணும்... இது போதாதுன்னு சமீபத்துல வந்த தீபாவளிக்கு, கடைக்கு இவ்வளவுன்னு, 'டார்கெட்' நிர்ணயம் பண்ணி வசூல் வேட்டை நடத்தியிருக்காரு வே...

''இதுபோக, தினமும் இரண்டு, மூணு தனியார் மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு போறவர், லஞ்சமா தரவேண்டிய பொருளை சொல்லிட்டு வந்துடுதாரு... வாங்கி தர மறுத்தா, ஏதாவது குறை கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுக்காரு... மாசத்துக்கு குறைந்தபட்சம், 5 லட்சம் ரூபாயாவது தேத்திடுதாரு வே...

''எந்த ஆட்சி வந்தாலும், கோவையிலயே, 20 வருஷமா முகாமிட்டு, கோடிகளை குவிச்சிட்டாரு... இப்ப, சென்னையில மாநில அளவிலான பொறுப்பை பிடிக்க, பெரிய அளவுல பேரம் பேசிட்டு இருக்காரு வே... இவருக்கு கீழே இருக்கிற ஒரு அதிகாரி, இவரது வசூலுக்கு ஒத்து ஊதுறதால, அவரை தன் பொறுப்புக்கு கொண்டு வர்றதாகவும் உறுதி தந்திருக்காரு...

''இதுவரை இவர் சேர்த்திருக்கிற சொத்துக்களை, சில அமைச்சர்கள் கூட சம்பாதிச்சிருக்க முடியாதுன்னு, துறைக்குள்ள பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''மாரிமுத்து, உம்ம குரு பாரதி வர்றாரு பாரும்...'' என, நண்பரிடம் கூறியபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


வாசகர் கருத்து (1)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    மெடிக்கல் ஸ்டார் வைத்திருப்பவர்கள் ஏன் இதுவரை புகார் செய்யவில்லை ? இனிமேல் ஆவண செய்யப்படும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement