தொடரட்டும் இந்த சேவை!
யாரையும் சாராமல், எதற்கும் அஞ்சாமல் வெளியிடும் செய்திகள், விமர்சனங்கள் முதலில் சம்பந்தப்பட்டோரை கோபமூட்டினாலும், பொறுமையாக யோசித்தால், 'சரி' என்றே தோன்றும். காரணம், 'தினமலர்' நாளிதழின் நடுநிலைமை தான்.
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரத் தன்மையுடன், 'போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி துாற்றுவார் துாற்றட்டும்' என்ற கண்ணதாசன் பாணியிலும், 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்ற அப்பர் வழியிலும், 'தினமலர்' நாளிதழ் நடை போடுகிறது. ஆளுங்கட்சிக்கும், ஆட்சிக்கும் அடிபணியாமல், செய்திகளை நடுநிலையாக வழங்குவதால், மக்கள் மனதில் நிலைத்த, நீடித்த இடம் பிடித்துள்ளது.
கூடவே, சமுக பிரச்னைகளை படத்துடன் வெளியிடுவது, அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால், அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையில் வளசரவாக்கம், பாலவாக்கம், நெசப்பாக்கம், ராமாபுரத்தில் மழையால் சாலைகள் சேதமடைந்ததை சுட்டிக்காட்டியதால், அரசும் அவசர நடவடிக்கை எடுத்து சரி செய்தது.
மக்கள், தங்கள் பகுதி குறைகளை, 'தினமலர்' நாளிதழுக்கு தெரிவித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பதும் இதன் வாயிலாக நிரூபணமாகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, சமூக பொறுப்புடன் சேவையாற்றும்,'தினமலர்' நாளிதழின் சேவை, இன்று போல என்றும் தொடர வேண்டும்.
நீதிமன்றத்தில் விதண்டாவாதம் தேவையா?
எச்.ஆப்ரகாம்,
நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருத்துவத்தில்,
வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கோ, விதண்டா வாதத்துக்கோ இதுவரை
எந்த மருத்துவத்திலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
விளையாட்டுத்
துறை அமைச்சர் உதயநிதி மீது சனாதன பேச்சு தொடர்பாக, சென்னை உயர்
நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், அவருக்காக வாதாடிய கழகத்தின்
மூத்த வக்கீல் வில்சனின் வாதம், 'அவர் அப்படித் தான் பேசுவார். அதை தட்டிக்
கேட்க யாருக்கும், எந்த உரிமையும் இல்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி
செய்ய வேண்டும்' என்று, பொருள் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
மேலும்,
'ஒருவரின் பேச்சு பிடிக்கவில்லை என்றால், அரங்கத்திற்கு வர வேண்டாம்.
அவரது பேச்சை கேட்க வேண்டாம். அதற்காக, கருத்துரிமையை தடுக்க முடியாது'
எனவும், வாதாடி இருக்கிறார்.
மேலும், 'ஒருவரை அமைச்சராக
நியமிப்பதும்,நீக்குவதும் முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டது' என்கிறார்
வக்கீல் வில்சன். அதனால் தானே, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, அமலாக்கத்
துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ஒருவரை, இலாகா இல்லாத
அமைச்சராக இன்றும் தொடர அனுமதித்துள்ளார் முதல்வர்.
'சர்ச்சைக்குரிய
கருத்துகளை அமைச்சர் பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர
முடியாது' என்கிறார் வில்சன். தனி நபர் வழக்கு தொடர முடியாது என்றால், ஒரு
குழுவாக, ஒரு அரசியல் கட்சி சார்பாக வழக்கு தொடரலாமா?
'ஏதோ,
உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டார். இனி, பொது மேடைகளில் கவனமாக பேசுவார்'
என நீதிமன்றத்தில் தெரிவித்து, வழக்கில் இருந்து விடுபடும் வழியை
பார்க்கலாம். அதை விட்டுவிட்டு, ஒரு சினிமாவில் ஆலமரத்தடி பஞ்சாயத்தில்,
'கையை பிடிச்சு இழுத்தியா...' என்ற வடிவேலு காமெடி போல, நீதிமன்றத்தில்
விதண்டா வாதம் புரிந்ததை, எந்த வகையிலும் ஏற்க முடியாது!
கட்சிகளின் கவுரவத்தை காப்பாற்றுங்கள்!
அண்ணா
அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ
-மெயில்' கடிதம்: போதைப் பொருள் கடத்தல், நில ஆக்கிரமிப்பு, மாமூல், கட்டப்
பஞ்சாயத்து போன்ற சமூக விரோத குற்றங்கள் புரிந்து, குறுகிய காலத்தில்
பெரும் லாபம் பார்க்க துடிப்போர், தங்கள் பாதுகாப்பிற்காக, ஏதாவது ஒரு
கட்சியின், 'லேபிள்' தேவை என்று அலைகின்றனர்.
முதலில், 'லோக்கல்'
திராவிட கட்சிகளை அணுகி, அங்குள்ள போட்டியால் பதவி கிடைக்காமல், அடுத்து,
தேசிய கட்சிகளை நாடுகின்றனர். அதிலும் வாய்ப்பில்லை என்றால், ஜாதிய
கட்சிகளிடம் செல்கின்றனர். இவர்களுக்காகவே புதிய பதவிகளை உருவாக்கி தந்து,
மூத்த தலைவர்கள் கொழிக்கின்றனர்.
இதனால், குற்றவாளிகள் பட்டியலில்
உள்ள ரவுடிகளும், கட்சிப் பதவியை அலங்கரிக்கின்றனர். இதையும் தாண்டி சிலர்,
ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன்,தன்னிச்சையாக மோசடி செய்வதும் நடக்கிறது.
அப்படித்
தான், தமிழக பா.ஜ.,வின் ஊடகப் பிரிவு தலைவர்களின் துணையுடன், உசிலம்பட்டி
முத்துராமன் என்பவர், மத்திய அரசின், எம்.எஸ்.எம்.இ., நேஷனல் புரமோஷன்
கவுன்சிலில் பதவி வாங்கி தருவதாக, பலரிடம் மோசடி செய்துள்ளார்; ஆனால்,
அப்படி ஒரு கவுன்சிலே இல்லை என்பது தான் அதிர்ச்சியான உண்மை.
பெரம்பலுாரில்
கல் குவாரி டெண்டருக்காக ஆளுங்கட்சி நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில்
நடத்திய அராஜகமும் ஒரு உதாரணம். மக்கள் ஆதரவு தான், அரசியல் கட்சிகளின்
உயிர் மூச்சு. அதனால் மக்கள் ஆதரவை பெற்றுத் தரும் கட்சி பதவியில்
இருப்போர், நுரையீரல் போன்றவர்கள். நுரையீரல் அழுகி விட்டால், கட்சி உயிர்
வாழ முடியுமா?
ஏற்கனவே, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்
மீதான லஞ்சம், ஊழல், கமிஷன் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனைகளால், அரசியல்
கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
இந்த
லட்சணத்தில் மோசடியாளர்களுக்கும், ரவுடிகளுக்கும் கட்சி பதவி தருவது
பேராபத்து. ஓட்டுக்கு நோட்டு கொடுத்து சமாளித்து விடலாம் என்பது இனியும்
எடுபடாது. மக்கள் ஓட்டளிப்பதையே புறக்கணிக்கும் விரக்தி நிலையும்
ஏற்படலாம்.
எனவே, அரசியல் கட்சிகள் தவறானவர்களை கட்சி பதவியில்
இருந்து களையெடுத்து, மக்களின் நம்பிக்கை பெற்றவர்களை நியமித்து,
கட்சிகளின் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வது தான், அவர்களின்
எதிர்காலத்துக்கு நல்லது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!