ADVERTISEMENT
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பத்மநாபநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., அசோக், 17ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல்வர் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த வகையில், பெங்களூரு ஆர்.எம்.வி., எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள பெங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.பி., சதானந்தகவுடாவை, நேற்று சந்தித்து ஆதரவு தரும்படி கோரினார். இருவரும் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். கட்சியை பலப்படுத்த, தான் உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்தார்.
பின், சதானந்தகவுடா கூறியதாவது:
மூன்று மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், பா.ஜ.,வுக்கு இன்னும் சக்தி வந்திருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படாததால், மேலிட தலைவர்கள் மீது கோபம் இருந்தது. தற்போது அந்த கோபம் நீங்கிவிட்டது. தகுதி வாய்ந்தவருக்கு தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது.
விஜயேந்திரா, அசோக் ஆகிய இருவரும் ஒற்றுமையுடன் கட்சியை பலப்படுத்துவர். அவர்களுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.
கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை சரிகட்டும் சக்தி, இருவருக்கும் உள்ளது. வருங்காலத்தில் அசோக் முதல்வராகட்டும்; அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன.
விஜயேந்திரா, அசோக் ஆகிய இருவருக்கும், பசனகவுடா பாட்டீல் எத்னால், சோமண்ணா ஆகியோரை சமாதானப்படுத்தும் சக்தி உள்ளது. எங்களிடம் வெண்ணெய் உள்ளது. இதைத் தடவி அதிருப்தியாளர்களை சமாதானம் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!