ADVERTISEMENT
ஹாசன்: ''சட்டசபையில் பென் டிரைவை காண்பித்தபோது, பல அமைச்சர்கள் எனக்கு போன் செய்தனர். நேரம் வரும்போது, பென் டிரைவை வெளியிடுவேன்,'' என, ம.ஜ.த., மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடக சட்டசபையில் நான், 'பென் டிரைவ்' காண்பித்தபோது, பல அமைச்சர்கள் எனக்கு போன் செய்தனர். அண்ணா, அண்ணா என, அழைத்தபடி என்னை தேடி வந்தனர். 'அண்ணா, நாங்கள் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். உங்களால் வளர்ந்தோம். பென் டிரைவில் என்னுடைய பெயரும் உள்ளதா?' என பயத்துடன் கேட்டனர்.
இவர்களின் உறக்கம் தொலைந்தது ஏன்; என்னை தேடி வர என்ன காரணம்; பென் டிரைவில் உள்ள பாம்பை வெளியேவிட்டால், இவர்கள் என்ன ஆவார்கள்? நேரம் வரும்போது வெளியிடுவேன்.
'முதல்வராக இருந்தபோது, நான் என்ன செய்தேன்?' என, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். இவரை நான் பிடித்து வைத்திருந்தேனா; விவசாயிகள் கடனை ரத்து செய்யவில்லையா; இதற்காக உங்களுக்கு கமிஷன் கிடைத்ததா? சாராயம், லாட்டரியை ஒழித்தேன்.
அரசியலமைப்பில் சித்தராமையாவின் மகனுக்கு, அதிகாரம் கொடுக்க முடியுமா; இவரது தொகுதியில், மகன் தர்பார் செலுத்த அதிகாரம் உள்ளதா? எங்கள் தந்தை முதல்வராக, பிரதமராக இருந்தவர். அப்போது நான், எம்.பி.,யாக இருந்தேன். ஆனால் எங்கள் தந்தை இத்தகைய அதிகாரத்தை, எப்போதும் எனக்கு கொடுத்தது இல்லை.
நான் முதல்வராக இருந்தபோது, ராம்நகரை பார்த்துக்கொள்ளுங்கள் என, எனக்கு முழு அதிகாரம் கொடுக்கவில்லை.
இப்ராஹிம் 'இப்போதும் நானே, ம.ஜ.த., மாநில தலைவர்' என, கூறி வருகிறார். தலைவர் என போர்டு தொங்கவிட்டு நடமாடட்டும்.
சித்தராமையா வைத்திருந்த, ஹியூப்ளேட் கைகடிகாரம் திருட்டு கடிகாரமாகும். இதை கட்டிக்கொண்டு, இரண்டு ஆண்டு முதல்வராக நடமாடினார். இவரிடம் இருந்து நான் பாடம் கற்க வேண்டுமா? விதான்சவுதாவுக்கு வரட்டும், விவாதிக்கலாம்.
அதிகாரிகளை இடமாற்ற, முதல்வருக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் முறைகேடு செய்யக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!