Load Image
Advertisement

2வது போக்சோ வழக்கில் மடாதிபதி முருகா சரணரு கைது!: ஜாமினில் விடுதலையான நான்கே நாளில் அதிரடி

Abbot Muruga Saranaru arrested in 2nd POCSO case!: Action on four days after release on bail   2வது போக்சோ வழக்கில் மடாதிபதி முருகா சரணரு  கைது!: ஜாமினில் விடுதலையான நான்கே நாளில் அதிரடி
ADVERTISEMENT
சித்ரதுர்கா: சித்ரதுர்கா முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, பாலியல் வழக்கில், நிபந்தனை ஜாமினில் விடுதலையான நான்கே நாளில், இரண்டாவது, 'போக்சோ' வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். உடனே, உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டதை அடுத்து, கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், இரவு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சித்ரதுர்கா முருகா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு, 65. மடத்துக்கு சொந்தமான உயர்நிலை பள்ளியில் படித்த மாணவியரை, இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, தனியார் தொண்டு நிறுவனத்தினர், மைசூரு நஜர்பாத் போலீசில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி புகார் செய்தனர்.

இதையடுத்து, முருகா சரணரு மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டு, சித்ரதுர்காவுக்கு மாற்றப்பட்டது. அவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி போலீசார் கைது செய்தனர். செப்., 5ம் தேதி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

16ல் நிபந்தனை ஜாமின்



இதற்கிடையில், சித்ர துர்காவில் மற்றொரு மாணவி அளித்த புகாரில், அவர் மீது இரண்டாவது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முருகா சரணரு கைது செய்யப்படவில்லை. விசாரணை மட்டும் நடந்து வந்தது.

முதல் வழக்கில் ஜாமின் கேட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் முருகா சரணரு விண்ணப்பித்த மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதனால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவருக்கு, முதல் வழக்கின் அடிப்படையில், கடந்த 15ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. 16ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். 'சித்ரதுர்காவுக்கு செல்ல கூடாது' என்று நீதிபதி நிபந்தனை விதித்ததால், தாவணகெரேவில் உள்ள விரக்தா மடத்தில் தங்கி இருந்தார்.

பிடிவாரன்ட்



இந்நிலையில், முருகா சரணரு மீதான இரண்டாவது போக்சோ வழக்கு, சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோமளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நவ., 21ம் தேதி, அதாவது இன்றைக்குள் முருகா சரணருவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, போலீசாரும் நேற்று மதியம் விரக்தா மடத்துக்கு சென்று, முருகா சரணருவை கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன், அவரை சித்ரதுர்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டிசம்பர் 2ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, சித்ரதுர்கா மாவட்ட சிறையில் முருகா சரணரு அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்ற உத்தரவு வெளிவந்த இரண்டு மணி நேரத்தில், முருகா சரணரு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்கும்படி அவரது வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.

விடுவிக்க உத்தரவு



மனுவை விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்த்ராஜ் பிறப்பித்த உத்தரவு:

முருகா சரணருக்கு முதல் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அது தொடர்பான மற்ற வழக்குகளுக்கும் பொருந்தும். சித்ரதுர்காவுக்கு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எப்படி அங்கு அழைத்து செல்லலாம்.

அவரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட சித்ரதுர்கா நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

இது குறித்து, முருகா சரணரு தரப்பு வக்கீல் உமேஷ் கூறுகையில், ''உயர் நீதிமன்ற உத்தரவின் நகல், சித்ரதுர்கா மாவட்ட சிறைக்கு இ - மெயில் வாயிலாக சென்றுள்ளது. பரிசீலித்து, அவரை விடுவிப்பர்,'' என்றார்.

இதையடுத்து, நேற்று இரவு, 8:30 மணிக்கு சிறையில் இருந்து முருகா சரணரு விடுவிக்கப்பட்டார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement