ADVERTISEMENT
தங்கவயல்: தனியார் பஸ் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெமல் அதிகாரி பலியானார்.
தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் துணை பொதுமேலாளராக பணியாற்றி வந்தவர் ஓம் பிரகாஷ், 58. இவர் மைசூரை சேர்ந்தவர். இவர், தங்கவயல் பெமல் ஆபிசர்கள் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். மனைவியும், ஒரு மகனும் மைசூரில் உள்ளனர்.
நேற்று காலை 10:30 மணிக்கு வழக்கம்போல பணிக்காக, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
தொழிற்சாலையின் மெயின் கேட் அருகில் சென்றபோது வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக பெமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின் தீவிர சிகிச்சைக்காக கோலார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடல் பிரேத பரிசோதனைக்கு பின், மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் பலர் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து பெமல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, தனியார் பஸ் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கின்றனர். பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
பெமல் நகர் ரயில்வே மேம்பாலம் முதல் பெமல் தொழிற் பயிற்சி நிலையம் வரையில், சாலையை சீரமைக்க ஆறு மாதங்களுக்கு முன்பு ஜல்லி கொட்டப்பட்டது.
ஆனால் தார் போடவில்லை. எங்கும் மேடும், பள்ளமுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சாலை சரியில்லாததால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுகின்றனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஆயினும் இச்சாலையை சீரமைக்காமல் பொதுப்பணித்துறையினர் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பெமல் தொழிற் சாலையின் துணை பொது மேலாளர் ஓம் பிரகாஷ் விபத்தில் பலியானதால் தொழிலாளர் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இன்னும் எத்தனை உயிரை, இந்த சாலை பலி வாங்குமோ என தொழிலாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!