ADVERTISEMENT
பெங்களூரு: ''மார்ஷல்கள் பெயரில் பெங்களூரு மாநகராட்சியில் ஆறரை ஆண்டுகளாக கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,'' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக, நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளில், குப்பை தரம் பிரிக்கும் விதிகளை கடுமையாக செயல்படுத்தவும், கண்ட, கண்ட இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கவும், குப்பை லாரிகளை கண்காணிக்கவும், 2017ல் வார்டுக்கு ஒருவர் வீதம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், என்.சி.சி., பயிற்சி முடித்தவர்கள் ஆகியோரை மார்ஷல்களாக அன்றைய அரசு நியமித்தது.
அதன்பின் வார்டு அளவிலான மார்ஷல்கள் எண்ணிக்கை அதிகரித்தது. திடக்கழிவுகள் மையம், மாநகராட்சி அலுவலகங்கள், வயர்லெஸ் ஆப்பரேட்டர்ஸ், கே.ஆர்., மார்க்கெட், ரஸ்ஸல் மார்க்கெட், மடிவாளா மார்க்கெட், கலாசி பாளையா மார்க்கெட் உட்பட பல இடங்களில் 384 மார்ஷல்கள் பணியாற்றுகின்றனர்.
இந்திரா உணவகங்கள், குப்பை மறுசுழற்சி மையங்கள், ஜெயநகர் வர்த்தக வளாகம், பெல்லந்துார் ஏரி, வர்த்துார் ஏரிகளின் பாதுகாப்பு ஆகிய இடங்களில் 366 மார்ஷல்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மேலதிகாரியாக, ஒருவர் இருக்கிறார்.
இந்த மார்ஷல்களுக்கு ஊதியம் வழங்க, ஆண்டுதோறும் 24 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரத்து 656 ரூபாயை மாநகராட்சி செலவிடுகிறது. 2017 முதல் இதுவரை, மார்ஷல்களுக்காக 157 கோடியே 19 லட்சத்து 64 ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை தேவையின்றி வீணாக்கியுள்ளது.
இவ்வளவு பணத்தை செலவிட்டும் கூட, மார்ஷல்களை நியமித்ததன் நோக்கம், 25 சதவீதம் கூட நிறைவேறவில்லை. பெல்லந்துார் மற்றும் வர்த்துார் ஏரிகளில், 42 மார்ஷல்கள் பணியாற்றுவதாக பொய்யான தகவல் தெரிவித்துள்ளனர். மார்ஷல்கள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
தேவைக்கு அதிகமான மார்ஷல்களை நீக்க வேண்டும். தண்ட செலவை தவிர்க்க வேண்டும். வரும் நாட்களில் இத்தகைய செயலை செய்ய கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!