மூதாட்டி கழுத்தை அறுத்து கொள்ளை மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு
ஆனேக்கல்: சிகிச்சை பெறுவது போன்று நடித்து, வீட்டுக்குள் நுழைந்த நபர், மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு, தங்க செயினை பறித்துத் தப்பினார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லின், லட்சுமி திரையரங்கு சாலையில் வசிப்பவர் நாராயணாச்சாரி, 60. இவரது மனைவி அக்கயம்மா, 60. மந்திரங்கள் ஓதி, நோய்களை நிவர்த்தி செய்வதாக சொல்கின்றனர். கை, கால் எலும்பு முறிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மந்திரம் பாராயணம் செய்வார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர், மூதாட்டியை சந்தித்து கால் வலிக்கு சிகிச்சை அளிக்கும்படி கோரினார். மூதாட்டி தங்க செயின் அணிந்திருப்பதை நோட்டம் விட்டார். சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றார்.
நேற்று காலை தம்பதி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த நபர், கதவை தாழிட்டு மூதாட்டியிடம் தங்க செயினை கழற்றித் தரும்படி மிரட்டினார். அவர் மறுத்ததால் கத்தியால், அவரது கழுத்தை அறுத்து, செயினை பறித்தார். மனைவியை காப்பாற்ற வந்த கணவர் நாராயணாச்சாரியையும் தாக்கிவிட்டு தப்பினார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர், காயமடைந்தத தம்பதியை மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்து அங்கு வந்த ஆனேக்கல் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!