11 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சல்லடை லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி ஆக்ரோஷம்
பெங்களூரு: பெங்களூரின் 11 சார் பதிவாளர் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தலைமை நீதிபதி சோதனை செய்த அலுவலகத்தில், பதிவாளர் இல்லாததால் 'ஆக்ரோஷம்' அடைந்தார்.
லஞ்ச அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தா, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அவ்வப்போது சோதனை நடத்தி, முறைகேடாக சம்பாதித்தவற்றை பறிமுதல் செய்கின்றன.
சந்தேகம்
ஆனாலும், ஊழல், லஞ்சம் ஆகியவை தொடர்ந்தே வருகின்றன. அதிகாரிகள் திருந்தியபாடு இல்லை என்றே சொல்லலாம். இவர்களால், நேர்மையான அதிகாரிகள் மீது கூட சந்தேகம் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலத்தை அளத்தல், பத்திரப்பதிவு, வரைபடம் தயாரித்து வழங்குதல் உட்பட சொத்து தொடர்பான விஷயங்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, லோக் ஆயுக்தாவுக்கு பல புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில், பெங்களூரின் எலஹங்கா, தேவனஹள்ளி, தொட்டபல்லாப்பூர், ஹொஸ்கோட், நெலமங்களா, ஆனேக்கல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு உட்பட 11 சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அலுவலகங்களில் இருக்கும் அனைத்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதை சற்றும் எதிர்பாராத துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சற்று நேரத்தில், பெங்களூரு கே.ஜி., சாலையில் உள்ள வருவாய் பவன் அலுவலகத்தில் உள்ள பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி பி.எஸ்.பாட்டீல் நேரடியாக வந்தார். இவரை பார்த்ததும் அதிகாரிகள், ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர்.
குளறுபடி
பின், கே.ஆர்., புரத்தில் உள்ள பெங்களூரு கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, பதிவாளரும் இல்லை; கணக்காளரும் இல்லை. இதனால் ஆக்ரோஷமடைந்த லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி, மற்ற அதிகாரிகளை வறுத்தெடுத்தார்.
பெரும்பாலான ஆவணங்களில் குளறுபடி இருந்தது. இதன் மீது மீண்டும் மீண்டும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!