பெங்களூரு: ''கர்நாடகாவின் வறட்சி பாதித்த பகுதிகளில், பா.ஜ., சார்பில் ஆய்வு பயணம், இன்று துவங்கும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
பெங்களூரு, விஜயநகரின், ஆதி சுஞ்சனகிரி கிளை மடத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், நேற்று வருகை தந்தார். மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகளிடம் ஆசிபெற்றார். பின் அவர் கூறியதாவது:
மாநில வறட்சி தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினேன். இதுகுறித்து சட்டசபையிலும் விவாதிப்போம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்காமல், மத்திய அரசை நோக்கி, மாநில அரசு விரல் நீட்டுகிறது.
அரசு உறக்கம்
வறட்சியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் கேட்டுள்ளேன். மாநில காங்கிரஸ் அரசு உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அரசை எச்சரிக்க வேண்டும். அரசின் காதை திருகுவோம். அப்போதும் விழிக்காவிட்டால், மாற்றுவழியை தேடுவோம்.
திறமையான எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற முயற்சிப்பேன். மக்களின் பிரச்னைகள் குறித்து, சட்டசபையில் குரல் எழுப்புவோம். வட மாவட்டங்களின் பிரச்னைக்கு, முக்கியத்துவம் தருவோம். ம.ஜ.த.,வும் எங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
நாங்கள் ஒன்று சேர்ந்து, வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வோம். வறட்சி உட்பட, மாநிலம் தொடர்பாக விவாதிக்கப்படும். கல்யாண கர்நாடகாவில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலைவர்களின் அதிருப்தியை சரி செய்வேன். அவர்களின் வீட்டுக்கு சென்று பேசுவேன். யாரும் கட்சிக்கு எதிராக பேசமாட்டார்கள்.
தத்த மாலை
சட்டசபை தேர்தலில், பல்வேறு காரணங்களால் சோமண்ணா தோற்றார். நானும், அவரும் சகோதரர் போன்று இருக்கிறோம். பெரும்பாலானோர் 'பாரத் மாதா கி ஜெய்' என, கோஷமிட துவங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் குமாரசாமி, தத்த மாலை அணிவதாக கூறியதை வரவேற்கிறேன். இது இந்திய பரம்பரை. எங்களின் தந்தை, தாத்தா என அனைவரும், தத்த மாலை அணிந்தனர்.
சிவ மாலை, தத்த மாலை, அய்யப்ப மாலை அணிவது நம் பாரம்பரியம். கடவுள் மீது பக்தியை காண்பிப்பதில், பாகுபாடு வேண்டாம். காங்கிரசார் பிரிவினை பார்ப்பர்.
திறமையான எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றும்படி, நிர்மலானந்தநாத சுவாமிகள் ஆலோசனை கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!