பெலகாவி: ''சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள், ஆத்திரமூட்டும் அறிக்கைகள், வீடியோக்களை வெளியிட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெலகாவிக்கு நேற்று நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வருகை தந்தார். நகர கட்டுப்பாட்டு அறை மற்றும் வயர்லெஸ் துறையின் பணிகளை பார்வையிட்டார்.
கண்காணிப்புப் பிரிவு
அப்போது அவர் பேசியதாவது:
சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள், ஆத்திரமூட்டும் அறிக்கைகள், வீடியோக்களை வெளியிட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சேபகரமான தகவல்கள், போலி செய்திகள் இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப பயிற்சி பெற்ற அதிகாரிகள், பணியாளர்களை சமூக வலைதள கண்காணிப்புப் பிரிவுக்கு நியமிக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கு தொடர்பான அபராதத்தை செலுத்த ஏழு நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன் பின்னும் செலுத்தாவிட்டால், நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்ப வேண்டும். அபராதம் செலுத்தாவிட்டாலோ அல்லது நீதிமன்றத்தை நாடாவிட்டாலோ வாகனத்தை 'ஜப்தி' செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்து விசாரித்தார்.
பெலகாவி நகரின் பல்வேறு ரவுண்டானா மற்றும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
சட்டசபை கூட்டம்
அப்போது நகர போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா, ''சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு செயலில் உள்ளது. ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. சமீபகாலமாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சட்டசபை, சட்ட மேலவை குளிர்கால கூட்டத்தொடரில், அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இதுகுறித்து, ஐ.டி., பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரில் நேற்று கூறியதாவது:போலி செய்திகள் பரவுவதை தடுக்க, கர்நாடக அரசு துணிச்சலான நடவடிக்கை எடுத்து, தனி பிரிவை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த பிரிவுக்கான நிறுவனங்களின் பதிவுக்கு அரசு டெண்டர் கோரியுள்ளது. தற்போது ஏழு நிறுவனங்கள் பதிவு செய்துள்ள நிலையில், ஐந்து நிறுவனங்கள் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அந்நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து, பின்னர் பெயர்கள் வெளியிடப்படும்.இந்த நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, போலி செய்திகளுக்கு எதிரான மற்றும் உண்மை சரிபார்ப்பு ஆகியவற்றில் விரிவான அனுபவத்தை கொண்டுள்ளன. தவறான தகவலை கண்டறிந்து திருத்தும் உண்மை சரிபார்ப்பு குழுவாக நிறுவனங்கள் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!