நந்தனம் மதுபான விடுதியில் பெண்கள் அலறியடித்து ஓட்டம்
சென்னை: சென்னை, நந்தனத்தில் 'பிக்புல்' என்ற மதுபான விடுதி உள்ளது. காலை 10:00 முதல் இரவு 11:00 மணி வரை நடத்த, அரசு அனுமதி வழங்கி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, அனுமதியை மீறி அதிக நேரம் செயல்பட்டுள்ளது. அப்போது, ஆண், பெண் என, 80 மேற்பட்டோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதில், விடுதி நிர்வாகத்திற்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.சிலர், வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். அப்போது, மது குடித்துக் கொண்டிருந்த பெண்கள் அலறியடித்து முகத்தை மூடிக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறினர்.
இது, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. இச்சம்பவம் குறித்து, சைதாப்பேட்டை போலீசார், விடுதி மேலாளர் ரவி உள்ளிட்டோரிடம் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது:
விடுதியில் அடிதடி, தகராறு எதுவும் நடக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, அதிக நேரம் செயல்பட்டதாக புகார் வந்தது. இது குறித்து, டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம்.
சிலர், இலவசமாக மதுபானம் கேட்டதாகவும், அவர்கள் பிரச்னை செய்ததாகவும் தெரிய வருகிறது.
இது குறித்து, விடுதி மற்றும் நுழைவு வாயிலில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விடுதி ஊழியர்கள், மது அருந்தியோர் சிலரிடம் விசாரணை நடக்கிறது. இவர்கள் கூறும் தகவல், கேமரா பதிவை வைத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!