ஏல சீட்டில் ரூ.50 லட்சம் மோசடி செய்த நபர் கைது
போரூர்: போரூர் அடுத்த சின்ன கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற இமானுவேல், 32; அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த மக்களிடம் மாதம்தோறும் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தியவர்களுக்கு, ரவி பணத்தைக் கொடுக்காமல் இருந்துள்ளார்.
பணம் செலுத்தியோர் பணத்தை திருப்பிக் கேட்கும் போதெல்லாம், விரைவில் கொடுப்பதாக கூறி, தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்று திரண்டு, ரவியை பிடித்து, நேற்று போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்களிடம் ஏலச்சீட்டு பெயரில், பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து, ரவியை கைது செய்து விசாரித்த போலீசார், ஏமாற்றப்பட்ட பணத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவதால், ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!