ADVERTISEMENT
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் 40க்கும் மேற்பட்ட கிராம பகுதிவாசிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இதற்கு விடிவு எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் வட்டம், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளர், போர்மேன், லைன் மேன், வயர்மேன், மின் கணக்கீட்டு பணியாளர் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மின் நிலையத்தில் இருந்து வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், இலுப்பூர், அதிகத்துார், கீழ்நல்லாத்துார், மற்றும் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதுவரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் கட்டடங்கள் முழுதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்புறம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதனால் இங்குள்ள அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த வரும் கிராம மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மழைக்காலங்களில் கட்டங்களில் மழைநீர் தேங்கி ஒழுகுவதால் அலுவலக பதிவேடுகள் நனைந்து வீணாகின்றன.
இதனால் ஊழியர்கள் தினந்தோறும் அச்சத்துடன் பணிக்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளும் மிகவும் சேதமடைந்து மிகவும் மோசமாகி பரிதாப நிலையில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துணை மின் நிலையத்திற்கு காம்பவுண்ட் சுவருடன் புதிய கட்டடம் கட்ட 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை மணவாளநகர் துணை மின் நிலைய ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மணவாளநகர் துணை மின் நிலையத்தில் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள மணவாளநகர் துணை மின் நிலையத்திற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 2 கோடி ரூபாய் மதிப்பி திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் துணை மின் நிலைய சீரமைப்பு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!