Load Image
Advertisement

குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பு நோய்:ப்ளூ வைரஸால் தொண்டை வலி, இருமல் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 'ப்ளூ' வைரஸால், தொண்டை வலி, இருமல், சளி, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு வலிப்பு ஏற்படுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால், டெங்கு, ப்ளூ, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில், ப்ளூ வைரஸ் பாதித்தவர்களுக்கு, ஓரிரு நாட்களில் காய்ச்சல் சரியானபின், உடல் வலி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஒரு வாரம் வரை நீடித்து வருகிறது.

குறிப்பாக, சளி இல்லாத வறட்டு இருமல் பாதிப்பு அதிகரித்து, மக்களை பாடாய் படுத்தி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, வலிப்பு பாதிப்பு ஏற்படுவதால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

அத்துடன், டெங்கு, டைபாய்டு காய்ச்சல் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வகை காய்ச்சல் பாதிப்புகள் ஜன., மாதம் வரை தொடரும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பிரிவு மற்றும் ரத்த பரிசோதனை பிரிவுகளில் கூட்டம் அலைமோதுகிறது. காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சனிக்கிழமை தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் ஒரு லட்சம் பேர் பயனடைகின்றனர். ஆனாலும், காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.

இது குறித்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:

குளிர்காலத்தில் தான், வைரஸ்கள் தன்மை அதிகரிக்கும். அப்போது, குழந்தைகள், இன்புளுயன்சா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இன்புளூயன்சா காய்ச்சலுக்கு தடுப்பூசி உள்ளது. அந்த பாதிப்பு குணமடையக்கூடியது.

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை முன்தடுப்பு அவசியம். வீட்டில் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுய மருத்துவமோ, அலட்சியமோ காட்டாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்

- நமது நிருபர் -.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement