பொன்னேரி நுாலக வாசக வட்டத்திற்கு அரசு விருது வழங்கி கவுரவிப்பு
பொன்னேரி: பொன்னேரி கிளை நுாலகத்தில், 17,500 உறுப்பினர்களுடன் வாசகர் வட்டம் செயல்பட்டு வருகிறது. வாசகர் வட்டத்தின் சார்பில், நுாலகத்தின் வளர்ச்சியை மேம்படுத்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் நுாலகங்களில் அதிக உறுப்பினர்கள், புரவலர்கள் மற்றும் நன்கொடைகள் சேர்த்தல், சுற்றுப்புற துாய்மை பராமரிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுகிறது.
பொன்னேரி கிளை நுாலகத்தின் வாகர் வட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து, கவுரவிக்கும் விதமாக தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை சார்பில், வாசகர் வட்டத் தலைவருக்கு 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நடந்த விழாவில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ், பொன்னேரி கிளை நுாலகத்தின் வாசகர் வட்ட தலைவர் பி.ஜோதிஸ்வரனுக்கு நுாலக ஆர்வலர் விருது வழங்கி கவுரவித்தார்.
பொன்னேரி கிளை நுாலகர் சங்கர் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!