இதற்காக, மாவட்ட நிர்வாகம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி மற்றும் பேரூராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதி - -8, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதி- 39; மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி -44 மற்றும் குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி- 42 என, மொத்தம் 133 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது.
அப்பகுதிகளில், மீட்பு நடவடிக்கைக்காக, 42 மண்டல குழு, 22 கூடுதல் குழு என, 64 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பாதிப்பு
மேலும், பேரிடர் ஏற்பட்டால், முன்கூட்டி தகவல் அளிக்க 9 பேர் கொண்ட ஒரு குழு, தலா 12 பேர் கொண்ட 6 தேடுதல் மற்றும் மீட்பு குழு, பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளோரை வெளியேற்ற, 31 பேர் கொண்ட 3 குழு மற்றும் 27 பேர் கொண்ட தற்காலிக தங்கும் முகாம் குழு -3 அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், 4,480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கும், 500 தன்னார்வலர்களுக்கும், 'ஆப்த மித்ரா' திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 56 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி புயல் பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் மெதிப்பாளையம் ஆகிய ஐந்து இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.
வெள்ளம்
வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரின் பணி மிகவும் உதவியாக உள்ளது. இதற்காக, திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட உதவி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் வில்சன் ராஜ்குமார் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில், 100 தீயணைப்பு வீரர்கள், 50 தன்னார்வலர்கள் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பதற்காக, 6 படகுகள், மழைக்கால மீட்பு உபகரணங்கள் முன்னெச்சரிக்கை பணிக்காக தயார் நிலையில் உள்ளன.
பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்றவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மின்விளக்கு, மிதவை மற்றும் பாதுகாப்பு உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம்; 'ஹைட்ராலிக்' முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களை தயார் நிலையில் உள்ளன.
ஆபத்து காலங்களில், 101, 112 என்ற இலவச எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுப்பாட்டு அறை
மாவட்டத்தில் பொதுமக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077: 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கட்டுப்பாட்டு அறை 044- 27664177, 044- 276 66746, வாட்ஸாப்எண். 94443 17862 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!